திருச்சி: அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அப்படி கூட்டணி அமைந்தால் பா.ஜ.க. வை கழட்டி விடும் அதிமுக-வின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் என திருச்சி விமான நிலையத்தில்வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கரூரில் த.வெ.க. கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதி உதவி அளிக்க உள்ளோம். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
நெரிசலால் ஏற்பட்ட இறப்புகள் வெளிப்புற நிலை தூண்டுதலால் ஏற்பட்ட இறப்பு என த.வெ.க. தரப்பில் கூறுகிறார்கள். கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் புற தூண்டுதலால் நடப்பது அல்ல. நெரிசல் சாவுகள் பல சம்பவங்களில் நடந்துள்ளது.
இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை பேசுவதும் கற்பனையாக பேசுவதும் அண்ணாமலைக்கு வாடிக்கையாக உள்ளது. சமூக பதட்டத்தை உருவாக்கவே அவர் குறியாக இருக்கிறார்.
விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. கரூர் சம்பவத்தை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்வது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் என்ன பின்னணியில் விசாரிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. நீதிபதிகள் தான் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
த.வெ.க தலைவர் விஜய், கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீதிமன்றத்தில் வைத்துள்ளார் என்ற கேள்விக்கு, விஜய் மக்கள் செல்வாக்கு மிக்கவர். அவர் செல்லும் போது பாதுகாப்பு தேவைதான். அவர் கோரிக்கை வைத்ததில் எந்த தவறும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.
அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அதிமுகவும் பா.ஜ.க.வும் கூட்டணியில் இருக்கும் சூழலில் விஜய் தன் கொள்கை எதிரியாக கூறும் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை. அப்படி கூட்டணி வைத்தால் பா.ஜ.க. வை கழட்டி விட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி பா.ஜ.க.வை கழட்டி விட்டால் அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் என்றார்.
அதிமுக - தவெக கூட்டணி, திமுக கூட்டணியை பாதிக்குமா என்கிற கேள்விக்கு, யூகத்திற்கு பதில் கூற முடியாது என்று திருமாவளவன பதிலளித்தார்.
சென்னையில் என்னுடைய கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறி சில தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது. அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக முந்திக்கொண்டு கருத்து கூறி பதட்டத்தை ஏற்படுத்தப்பார்க்கிறார். அவர் முந்திக்கொண்டு கருத்து கூறியது உள்நோக்கம் கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். அடங்க மறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கூறிய அரசியல் முழக்கம். எனக்கு பாதுகாப்பாக என்னுடைய தொண்டர்கள் இருப்பார்கள் என்றார். மேலும், கார் மோதியது என நிரூபித்தால் நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.