தங்கத்தைவிட கலைமாமணி விருதுக்கு மதிப்பு அதிகம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் கலைமாமணி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இயல் - இசை - நாட்டியம் - நாடகம் - திரைப்படம் - சின்னத்திரை - இசை நாடகம் - கிராமியக் கலைகள் - இதர கலைப் பிரிவுகள் என்று கலைத்துறையின் எந்தப் பிரிவும் விடுபட்டுவிடக் கூடாது என்று கவனத்துடன் இந்த விருதுகளை வழங்குகின்ற இயல் இசை நாடக மன்றத்துக்கு என்னுடைய மனதார சிறப்புக்குரிய பாராட்டுக்கள்! கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்பட்டிருக்கிறது!
இன்றைக்கு நாட்டில் தங்கத்தின் விலை என்னவென்று உங்களுக்கே தெரியும்… ராக்கெட் வேகத்தில், ஒருநாளைக்கு இரண்டு முறை விலை ஏறிக்கொண்டு இருக்கிறது. இந்த விருது அறிவித்த அன்றைக்கு இருந்த தங்கத்தின் விலையும், இன்றைக்கு இருக்கக்கூடிய விலையையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரியும்! ஆனால், அவ்வளவு மதிப்புமிக்க தங்கத்தைவிட, “கலைமாமணி” என்று புகழ் சேர்க்கும் பட்டத்திற்குத்தான் மதிப்பு அதிகம்! ஏனென்றால், இது தமிழ்நாடு தருகின்ற பட்டம்!
தலைவர் கலைஞரின் வழியில், கலைஞர்களை போற்றும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது! கலைஞரின் அரசு கலைகளைப் போற்றும் அரசாக, முத்தமிழைப் போற்றும் அரசாகத்தான் எப்போதும் இருக்கும்! அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டுதான், சிம்பொனி சிகரம் தொட்ட தமிழர் இசைஞானி இளையராஜாவுக்கு, திராவிட மாடல் அரசு எடுத்த மாபெரும் பாராட்டு விழா! உலகில் எந்தக் கலைஞருக்கும், எந்த அரசாங்கமும் இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்தியதில்லை என்று இசைஞானியே குறிப்பிட்டார்.
“என் மீது ஏன் இவ்வளவு பாசம் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று சொன்னார். மூன்று தமிழையும் வளர்த்த இயக்கம்தான், திராவிட இயக்கம்! திராவிட இயக்கம் - மேடைத் தமிழை வளப்படுத்தியது! நாடகத் தமிழை வளர்த்து, சமூகத்தையே பண்படுத்தியது! இசைத் தமிழையும் வளர்த்தது; அது தமிழிசையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியது! திராவிட இயக்கத்தின் வளர்ச்சியுடன் இந்தக் கலைகளும் வளர்ந்தது என்று சொல்லப்படுவதுதான் இந்த வரலாறு!. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.