உச்சநீதிமன்றம் கோப்புப்படம்.
தமிழ்நாடு

கரூா் கூட்டநெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு!

கரூா் கூட்டநெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது பற்றி...

 நமது நிருபர்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனு, தமிழக அரசின் மனு ஆகியவை மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (அக்.13) பிறப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பான மனுக்கள் திங்கள்கிழமை விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, இந்த விவகாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு விரிவாக விசாரணை நடத்தி தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசு, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஆகியோரின் தரப்பு வாதங்களை கேட்டுப் பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை திங்கள்கிழமைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இந்த விவகாரத்தில் திங்கள்கிழமையே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். அந்தச் சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்த வழக்கு நிலுவையில் இருந்தது.

ஆனால், சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி இந்த வழக்கை எவ்வாறு சுயமாக விசாரணைக்கு ஏற்று சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது எனப் புரியவில்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

கரூா் சம்பவம் தொடா்பாக தமிழக அரசு ஏற்கெனவே முன்னாள் நீதிபதி அருணா தலைமையிலான ஆணையத்தை அமைத்துள்ளது. ஒரே விவகாரத்தில் நடக்கும் பல விசாரணைகள் எந்த தீா்வையும் நோக்கிச் செல்லாது என்று உயிரிழந்தவா்களில் ஒருவரின் தந்தையான பன்னீா்செல்வம் பச்சைமுத்து சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் முறையிட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில் தவெகவின் முக்கியத் தலைவா்களான என். ஆனந்த், சி.டி.ஆா். நிா்மல் குமாா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதில் கைதாகாமல் இருக்க இருவா் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 3-ஆம் தேதி நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

SCROLL FOR NEXT