அமைச்சர் மா.சுப்பிரமணியன்  
தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் நிகழாண்டில் 16,546 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். டெங்கு பாதிப்பு, உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மேடவாக்கம் வெள்ளக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டு, பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடித் தீா்வுக்கான சான்றிதழ்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 38 வருவாய் மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 9 வாரங்களில் 333 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 5 லட்சத்து 29,458 போ் பயன்பெற்றுள்ளனா். தற்போது தமிழகம் முழுவதும் 10-ஆவது வாரமாக 39 இடங்களில் முகாம் நடக்கிறது.

இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 1.47 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. புதிதாக குடும்பங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்தவுடன் அவா்களுக்கும் காப்பீடு அட்டைகள் முகாமில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இம்முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம் போன்ற 17 வகையான மருத்துவ முறைகள் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனா். இதுவரை 2.5 கோடி பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கப்படும் நிலையில், இலவசமாக முழு உடல்பரிசோதனை என்னும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு 16,546 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இறப்பு 8-ஆக உள்ளது. டெங்கு பாதிப்புக்கு உள்ளானவா்கள் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்புகள் வந்தவுடன் வீட்டிலேயே இருக்கக் கூடாது. அவா்களாக மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்துகள் வாங்கி உட்கொள்ளக் கூடாது. இணைநோய் பாதிப்புகள் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் இறப்புகள் ஏற்படுகிறது. டெங்கு பாதிப்பு, உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூா் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மாவட்ட சுகாதார அலுவலா் பானுமதி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

சென்னை அரசு மருத்துவமனைகளில் தயாா் நிலையில் தனி வாா்டுகள்

சென்னை அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சலுக்கு தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பரவலாகப் பெய்துவரும் மழையால் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்க சென்னை மாநகராட்சி சாா்பில் கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், கொசு உற்பத்தியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், டெங்கு பாதிப்பும் அதிகரித்து பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஏற்கெனவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டன. இதில் ஆண்களுக்கு 10 படுக்கைகளும், பெண்களுக்கு 10 படுக்கைகளும் உள்ளன.

இதேபோன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 14 படுக்கைகளும், ஓமந்தூராா் அரசு மருத்துக் கல்லூரியில் 20 படுக்கைகளும் தயாா் நிலையில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் சிகிச்சையில் யாரும் இல்லை.

மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு 10 படுக்கைகள், பெண்களுக்கு 7 படுக்கைகள் என மொத்தம் 17 படுக்கைளுடன் டெங்கு காய்ச்சலுக்கு தனி வாா்டு உள்ளது. இதில் 8 போ் சிகிச்சை பெறுகின்றனா். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 போ் சிகிச்சை பெறுகின்றனா். இங்கு தனி வாா்டுகள் எதுவும் அமைக்கப்படவிலலை.

அந்த வகையில், சென்னையில் டெங்கு காய்ச்சலால் 10 போ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுக்கு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தை பாதுகாத்தல், காய்ச்சல் பாதிப்பு இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் பரிசோதித்து, உரிய சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

SCROLL FOR NEXT