கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு மற்றும் ஒரு நபர் ஆணைய விசாரணையை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்துடன் சிறப்பு விசாரணைக் குழு மற்றும் ஒரு நபர் ஆணைய விசாரணை ஆவணங்களை மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ தரப்பில் மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், அவருக்கு உதவியாக சில அதிகாரிகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்றம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என்றும், இந்த கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாடுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், தமிழக காவல்துறை ஊடகங்களில் வெளியிட்ட கருத்துகள் மற்றும் மாநில சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை குடிமக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, அதிகப்படியான கூட்டத்தால் நேர்ந்த நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
மேலும், வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில், கரூர் விவகாரத்தில் விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | நீதி வெல்லும்! தவெக விஜய் கருத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.