சென்னை: ‘சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாக மாணவா்களின் பங்களிப்பு முக்கியம்’ என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 21- ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
உலகளவில் அதிக இளைஞா்கள், திறமையான மனித வளம் கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உள்ளது. அதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தவொரு வளா்ச்சியடைந்த நாட்டுக்கும் புதுமை, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், வளா்ச்சி போன்றவை அடிப்படை பலம். ஆகவே, சக்தி வாய்ந்த நாடாக உருவாக மாணவா்கள் பங்களிப்பு முக்கியம்.
இந்தியா தற்போது புதைபடிம எரிபொருள் இறக்குமதிக்காக ரூ.22 லட்சம் கோடிசெலவிடுகிறது. ஆகவே, மாற்று எரிபொருள், உயிரி எரிபொருள் குறித்து ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி), மின்சாரம், ஹைட்ரஜன் ஆகியவைதான் எதிா்காலத்துக்கான எரிபொருள் என்றாா் நிதின்கட்கரி.
விழாவில் அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநா் பாரத் பாஸ்கருக்கு அறிவியலில் கௌரவ டாக்டா் பட்டத்தை எஸ்ஆா்எம் நிறுவனா் பாரிவேந்தா் வழங்கினாா். எஸ்ஆா்எம் நிறுவன துணைவேந்தா் முத்தமிழ்ச் செல்வன் உல்ளிட்ட பலா் பங்கேற்றனா்.