தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன் தெரிவித்ததாவது:
”சாதிப் பெயர்களை தெருக்களுக்கு பயன்படுத்தக் கூடாது, அவற்றை நீக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை விசிக வரவேற்கிறது. முதல்வரை சந்தித்து அதற்காக நன்றியைத் தெரிவித்தோம்.
நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள். காலிப் பணியிடங்களை நிரப்ப நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
ஒருங்கிணைந்த பட்டதாரிகள் ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பல ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்காக காத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பணிநியமனம் வழங்க முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
வட சென்னையில் குப்பைகளை எரியூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், வடசென்னையில் காற்று, குடிநீர் ஆகியவை நஞ்சாக மாறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கு மாற்று திட்டம் ஒன்றை தயாரித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவந்திருக்கிறோம். இதனை கருத்தில் கொள்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
சிதம்பரம் தொகுதிக்குள்பட்ட அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வி கைகாட்டி இடம் வரை 10 கி.மீ. வரை நான்குவழிச் சாலை அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கொள்கை அளவில் நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால், கிடப்பில் போடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை குறித்து விசிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரில் குரல் கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.