பேரவையில் தரையில் அமர்ந்து இபிஎஸ் தர்னா!
பேரவையில் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பு செய்தனர்
கரூர் சம்பவம் தொடர்பான காரசார விவாதத்தின்போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்த சில வாசகங்களை நீக்க வலியுறுத்தி பேரவைத் தலைவர் மு.அப்பாவு இருக்கை முன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
பேரவையில் புதன்கிழமை விவாதம் நடந்து கொண்டிருந்தபோதே திடீரென எழுந்த எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் இருக்கை முன் தரையில் அமர்ந்து முழக்கம் எழுப்பினர்.
தங்களுக்கு எதிராக பேரவையில் பதிவு செய்யப்பட்ட கடுமையான வாசகங்களை நீக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். அவர்களை பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோர் சமாதானப்படுத்தி இருக்கையில் அமரும்படி அறிவுறுத்தினர்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது உண்மையா? இல்லையா? அதை எப்படி அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியும்? என்றார்.
ஆட்சேபிக்கும் வாசகங்கள் எவை எனக் குறிப்பிட்டால் அவற்றை உடனடியாக அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாகவும், இல்லையெனில் அவை முடிந்தவுடன் விவாதங்களைப் படித்துப் பார்த்து ஆட்சேபணைக்குரிய வாசகங்களைத் தெரிவித்தால் அவற்றை நீக்குவதாகவும் பேரவைத் தலைவர் உறுதியளித்தார். இருப்பினும் அதிமுக உறுப்பினர்கள் சமாதானமடையவில்லை.
அதிமுக உறுப்பினர்கள் தங்களது இருக்கைக்குப் போகாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினால், அவைக் காவலர்கள் உதவியுடன் வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என பேரவைத் தலைவர் எச்சரித்தார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காலதாமதமாக பாஜக வெளிநடப்பு: பேரவையில் அதிமுகவினர் தர்னா செய்தபோது பாஜக உறுப்பினர்கள் அமைதியாகவே இருந்தனர். அதிமுக வெளிநடப்பு செய்த சிறிது நேரத்தில், கரூர் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் பேசினார். பின்னர், அவரது தலைமையில் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அன்புமணி தரப்பினர் வெளிநடப்பு: பாமக தரப்பில் ஜி.கே.மணிக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், ஆட்சேபணை தெரிவித்த அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன் (தருமபுரி), சிவக்குமார் (மயிலம்), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.