கரூர் சம்பவம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன்? என்பது குறித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (அக். 15) சென்னை, தலைமைச் செயலகம், சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன், சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:
”இன்றைக்கு எதுவுமே சாதிக்க முடியாத எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி என்கின்ற ஒற்றை அஜெண்டாவுடன் இன்றைக்கு சட்டமன்றத்திற்கு வந்து, தோல்வி கண்டு, அதற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பொய்யான பல்வேறு செய்திகளை உங்களிடத்தில் தந்திருக்கின்றார். அதற்கான விளக்கங்களை தரவேண்டியது எங்களுடைய கடமை.
ஏனென்றால், எந்த ஒரு அரசாங்கமும் இதுவரை நாங்கள் சட்டமன்றத்தில் பார்த்திருக்கின்றோம் - தர்ணா செய்து உட்கார்ந்து இருப்பார்கள், அவர்களை சட்டமன்றக் காவலர்கள் வெளியேற்றுவார்கள். ஆனால், ஜனநாயகத்தில் அக்கறை கொண்ட எங்களுடைய முதல்வர், நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ, சொல்லுங்கள் - எதை நீக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அதைச் சொல்லுங்கள் - அதை பார்த்து நாங்கள் பரிசீலித்து நீக்குகிறோம் என்று வெளிப்படையாகவே எழுந்து நின்று சொன்ன பிறகும், அவர்களாலே எதை நீக்க வேண்டும் என்று சொல்ல முடியவில்லை. அருகில் இருந்தவர்களிடம் எதை நீக்க வேண்டும் என்று கேட்டால், எதை நீக்க வேண்டும் என்று சொல்ல முடியாத அளவிற்கு இன்றைக்கு தர்ணா நாடகத்தை நடத்தினார்கள். அதனால், இன்றைக்கு தோல்வி முகத்தோடு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்கள்.
திருவாரூர், திருச்சி, நாகை, நாமக்கல்லில் யாருக்கும் எதுவும், ஏற்படவில்லை என்று அவர் சொல்கிறார். திருச்சியிலும், மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் - மயக்கம் அடைந்து இருக்கிறார்கள் -ஆதாரங்கள் இருக்கின்றன - நாமக்கல்லில் 35 பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதேபோல், நாகப்பட்டினத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி தவெக கூட்டம் நடைபெற்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த கூட்ட நெரிசல் எதனால் வந்தது? அதை நீங்கள் நன்றாக எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்பொழுது எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ரோடு ஷோ-விற்கோ போவதாக இருந்தால், அந்த இடத்திற்கு 500 மீட்டருக்கு முன்னாலேயே அவர்கள் அந்த வண்டியிலிருந்து எழுந்து நின்று கொண்டு அங்கே தங்களை காண வந்திருக்கின்ற பொதுமக்களைப் பார்த்து, கையசைத்து, கும்பிட்டு அவர்களிடத்தில் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு, அவர்கள் தருகின்ற சால்வைகளை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இதுதான் வழக்கம். ஆனால், இவர் 500 மீட்டருக்கு முன்னாலேயே அந்த பஸ்ஸில் ஒளிந்து கொண்டு, உட்கார்ந்து கொண்டு விட்டார். அதற்குப் பிறகு லைட்டுகளையும் அமர்த்திவிட்டார்கள். எந்த ஒரு தலைவராவது, தான் இருப்பதை வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அமர்த்திவிட்டு, எந்த ஸ்பாட்டில் தான் பேச வேண்டுமோ, அந்த ஸ்பாட்டிற்கு வந்தவுடன் லைட்டைப் போட்டு போட்டு அமர்த்தினார்கள். சினிமாவில், லைட்டை அமர்த்தி, அமர்த்தி போட்டு காண்பிப்பார்களே, அதுபோல காண்பித்தார்கள்.
அதனால், மக்கள் கூட்டம் அவர்களை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால் பின்னாலே இருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்தார்கள். அந்த முன்னால் வந்ததனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அங்கே மூச்சுத்திணறி தான் பத்து, பதினைந்து பேர் மூச்சுத் திணறி இறந்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை வேண்டும் என்றே அங்கே உருவாக்கி இருக்கிறார்கள். அதை போல, எங்களுக்கு மின்சாரம் வேண்டாம், நாங்களே ஜெனரேட்டர் வைத்து கொள்கிறோம் என்று சொன்னார்கள் - அப்புறம் அந்த ஜெனரேட்டரில் திடீரென்று ஒரு லைட்டை காண்பிக்கிறார்கள் - அந்த மாதிரியான சீன்களை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.
அன்றைக்கு வேறு விசாலமான இடம் தந்திருக்கலாமே - மாநாடு நடத்திய இடத்தை தந்திருக்கலாமே என்று இன்றைக்கு கேட்கிறார்கள் – ரோடு ஷோ கரூரிலிருந்து 2 கிலோ மீட்டருக்கு அப்பால் மாநாடு நடத்தினோம். 2 லட்சம் பேர் கூடக்கூடிய இடம் - நாங்கள் 10 ஆயிரம் பேர் வருகின்ற இடத்தில் நாங்கள் கேட்கிறோம் – அதனால், தாருங்கள் என்று கேட்டால், உள்ளுக்குள் இருக்கின்ற ரோட்டை தருவோமா, அந்த மாநாடு நடந்த இடத்தையும் அவர்கள் கேட்கவும் இல்லை. கேட்டிருந்தால் கொடுத்து இருக்கலாம். ஆனால், அந்த இடத்தில் அவர்கள் இரண்டு லட்சம் பேரை கூட்ட முடியாது. 30,000 பேர் 20,000 பேரை கூட்டி ஒரு நெரிசலை காண்பிக்க முடியுமே தவிர, வேறல்ல.
ஆதலால், இப்போது சொல்கிறார்கள், மாநாடு நடத்தப்பட்ட இடத்தை கொடுத்திருக்கலாமே - அவர்கள் கேட்கவில்லையே - கேட்டிருந்தால் தானே அந்த பிரச்சினை ஏற்படும். அதனால், கடைசியாக அவர்கள் கேட்ட இடம், இரண்டு நாள்களுக்கு முன்னால் எடப்பாடி பழனிசாமி பேசிய அந்த இடத்தைத்தான் கோர்ட்டில் கேட்டார்கள் - கோர்ட்டு அனுமதியின்படி அந்த இடம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இதுதான் அந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொடுக்கப்பட்டது. முப்பெரும் விழா நடந்த இடத்தை கொடுக்க வேண்டிய அவசியம் அவர்கள் கேட்கததால் எழவே இல்லை. இது திட்டமிட்டு நடத்த சம்பவமாக இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் நினைக்கிறார்கள் என்று பழனிசாமியின் உள் மனது சொல்கிறது. பழனிச்சாமி வேண்டும் என்றால் அப்படி நினைக்கலாம். ஆனால் எங்களுடைய மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அந்த 41 பேர் இறந்தவுடன் உடனடியாக கதறி, துடித்து மனிதாபிமானத்தோடு அங்கே வந்து இரவோடு இரவாக போஸ்ட்மார்டம் நடத்தி, அந்த உடல்களை ஒப்படைத்து, காயம்பட்டவர்களுக்கு எல்லாம் தேவையான உதவிகளை செய்து, அவர்களைப் காப்பாற்றிய அரசு எங்களுடைய அரசு.
அவர் கேட்கிறார், போஸ்ட்மார்ட்த்திற்கு மூன்று டேபிள்தானே போடப்பட்டிருந்து என்று கூறுகிறார். போஸ்ட்மார்ட்த்திற்கு மூன்று டேபிள்தான் இருந்தது. ஆனால், மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெற்று, 8 டேபிள்கள் அங்கு போடப்பட்டன. யார் வேண்டுமானாலும் அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் - கேட்டுக் கொள்ளலாம். அந்த உயிர் இழந்தவர்களின் குடும்பங்களிடம் சென்று கேட்டுக் கொள்ளலாம். ஏறக்குறைய பல மாவட்டங்களில் இருந்து போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, போஸ்ட்மார்ட்டம், மறுநாள் மதியம் வரை ஒரு மணி வரை நடைபெற்றது. எனவே, போஸ்ட்மார்ட்டமும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட்டது. இதில், எந்த அவசரமும் நாங்கள் காண்பிக்கவே இல்லை. காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், முதல்நாள் இரவு அருகில் உள்ள திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
எனவே, தான் அங்கு 1500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்கள் இருந்த காரணத்தினால் தான் அவ்வளவு பெரிய கூட்டத்தில் அடிபட்டவர்களை எங்களால் காப்பாற்றப்பட்டு பலரின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.
அதற்கு அரசு இரவோடு இரவாக எடுத்த நடவடிக்கை தான் காரணமே தவிர வேறு அல்ல. எனவே, இப்படி மக்களை எல்லாம் காப்பாற்றுகின்ற அரசாக தான் நாங்கள் இருக்கிறோமே தவிர எங்கள் தலைவர் தளபதி இருக்கிறாரே தவிர, இன்றைக்கு மக்கள் எல்லாம் நசுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மக்களை காப்பாற்றுகிற அரசு குடிக்க தண்ணீர்கூட கொடுக்கவில்லை என்று சொல்கிறார் - அவர்கள் அங்கு தண்ணீர் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால், வைக்கப்படவில்லை. மருத்துவமனைக்கு வந்த பிறகு கேட்டால், அங்கு தண்ணீர் இல்லை, உடனே எங்கள் மாநாட்டிற்காக வைக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களை எடுத்து கொடுத்ததால் அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்.
இரவோடு இரவாக ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா? இப்படி எல்லாம் கேவலமான புத்தியோடுதான் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கின்றார். இதை வைத்து அரசியல் செய்யலாம் - கூட்டணி சேர்க்கலாம் - என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறார் - எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும், இன்றைக்கு நாங்கள் ஐந்தாண்டு காலத்திலே எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகள், திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாவது பாகத்தை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருக்கும்.
அடுத்தது மற்றொன்று சொல்கிறார்கள் - ஐஏஎஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்தார்கள் என்று கூறுகிறார். அரசின் திட்டங்கள் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை அமைச்சர்கள் சொல்வதைப் போன்று ஐஏஎஸ் அதிகாரிகளும் சொல்லலாம். கரோனா காலத்தில் சொல்லியிருக்கிறார்கள் வேறு பேரிடர்கள் ஏற்பட்ட போதெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். தில்லியில் பல விளக்கங்கள் மத்திய அரசின் செயலாளர்கள் சொல்வது வழக்கம். எனவே, ஐஏஎஸ் அதிகாரிகள் விளக்கம் கொடுத்தார்கள் என்பதில் என்ன தவறு இருக்கிறது? என்ன நடந்தது? என்ன என்பதை ஐஏஎஸ் அதிகாரிகள் சொல்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறதா? எதிலும் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் நினைத்துப் பார்க்கிறார். ஆனால் எதிலும் அவரால் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதுதான் உண்மை.
டிஜிபிக்கு பதிலாக ஏடிஜிபி சென்று இருக்கிறார் என்று சொல்கிறார். அன்றைக்கு அந்தக் கூட்டத்தில் இருந்ததால், உடனடியாக ஏடிஜிபி சென்று விசாரணை நடத்தினார். அதில் என்ன தவறு இருக்கிறது. காவல் அதிகாரிகள் யார் வேண்டுமானாலும் சென்று விசாரணை செய்யலாம் - அதன்படி சென்று நடவடிக்கை எடுத்தார்கள்” என்றார்
இதையும் படிக்க: விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடியில் சிக்கினார்! ரூ. 13 லட்சம் இழப்பு!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.