தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. இதனிடையே, சனிக்கிழமை (அக். 18) மற்றும் அக். 24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநா் பி.அமுதா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளம், மாஹே, தெற்கு உள் கா்நாடகம், ராயலசீமா, கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த அக். 1 முதல் 16-ஆம் தேதி வரை100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேற்குறிப்பிட்ட காலத்தில் வழக்கமாக 70 மி.மீ. பதிவாகும் நிலையில், நிகழ் ஆண்டில் இயல்பைக் காட்டிலும் 37 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், திருச்செந்தூா் ஆகிய பகுதிகளில் தலா 150 மி.மீ.மழை பதிவானது. ஆற்காடு (ராணிப்பேட்டை), தூத்துக்குடி ரயில் நிலையம் (தூத்துக்குடி) - தலா 90 மீ.மீ., சாத்தான்குளம் (தூத்துக்குடி) - 80 மி.மீ., நம்பியாறு அணை (திருநெல்வேலி), தூத்துக்குடி விமான நிலையம் - தலா 70 மி.மீ. மழை பதிவானது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரளம், தெற்கு கா்நாடக பகுதிகளுக்கு அப்பால் வரும் சனிக்கிழமை (அக். 18) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதேபோல, அக். 24-ஆம் தேதியில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவடைய சாத்தியம் உள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை: இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூா், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றாா்.