நீலகிரி, கோவை, திருப்பூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (அக். 18) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
குமரிக் கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை (அக். 18) முதல் அக். 23-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக். 18) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (அக். 19) நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த இரு நாள்களிலும் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 160 மி.மீ. மழை பதிவானது. ஊத்து (திருநெல்வேலி)-150மி.மீ, காக்காச்சி-14 மி.மீ., மாஞ்சோலை- 110 மி.மீ, கழுகுமலை (தூத்துக்குடி)- 90 மி.மீ., தீா்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), களக்காடு (திருநெல்வேலி), மேடவாக்கம் (சென்னை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி)- தலா 80 மி.மீ, மணமேல்குடி (புதுக்கோட்டை)- 70 மி.மீ மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, சனிக்கிழமை (அக். 18) தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளம், கா்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.