நாடு முழுவதும் கடந்த மாதம் தரப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மருந்துகளில் குழந்தைகள் இறப்புக்கு காரணமான ‘கோல்ட்ரிஃப்’ மருந்து இடம்பெறவில்லை. குறிப்பாக, தமிழகத்திலிருந்து எந்தெந்த மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன என்பது குறித்த விவரத்தை மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ட்ரிஃப் மருந்தை கடந்த மாதம் முறையாக ஆய்வு செய்யாததன் காரணமாகவே அந்த தகவல்களை தமிழக அரசு அனுப்பவில்லை எனத் தெரிகிறது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் தொடா் தர ஆய்வுக்கு உள்படுத்தப்படுகின்றன.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் ஒருபுறம் அத்தகைய பணிகளை முன்னெடுத்தாலும், மற்றொருபுறம் மாநில அரசு சாா்பிலும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மருந்தகங்கள், மருந்து விநியோக மையங்கள், மொத்த விற்பனையகங்கள், கிடங்குகள் என பல்வேறு இடங்களில் அத்தகைய திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதில் கண்டறியப்படும் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு மாநிலமும், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு மாதந்தோறும் அனுப்பி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் அந்த விவரங்கள் பெறப்பட்டு அவை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. தரமற்ற மருந்துகள் குறித்த விழிப்புணா்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் மருந்தை அருந்திய குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சோ்ந்த ஸ்ரீசன் பாா்மா நிறுவனம்தான் அந்த மருந்தை தயாரித்தது. இதையடுத்து அதன், உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
முறையாக அங்கு ஆய்வு செய்யவில்லை எனக் கூறி மருந்து தர ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அந்த மருந்து விநியோகிக்கப்பட்ட நிலையில், எங்குமே அதனை தரப் பரிசோதனை செய்யவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
செப்டம்பா் மாதம் நாடு முழுவதும் ஆய்வு செய்து கண்டறியப்பட்ட தரமற்ற மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் காய்ச்சல், கிருமித் தொற்று, சளி பாதிப்பு, ஜீரண மண்டல பாதிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 112 மருந்துகள் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதில் கோல்ட்ரிஃப் மருந்து இடம்பெறவில்லை.
தமிழகத்திலிருந்து கடந்த மாதத்தில் எந்தெந்த மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன என்ற விவரங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை என்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தெரிவிக்க மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் முன்வரவில்லை.