ஆயுள் தண்டனை 
தமிழ்நாடு

காரைக்காலில் மகளை விட நன்றாக படித்த மாணவன் கொலை: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

மகளை விட நன்றாக படித்த மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: காரைக்காலில், தன்னுடைய மகள் படிக்கும் வகுப்பில், மகளை விட நன்றாகப் படித்த மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்துக் கொலை செய்த சகாயமேரி விக்டோரியாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விஷம் கலந்த குளிர்பானத்தை, பள்ளியின் காவலாளி மூலம், சிறுவனின் பெற்றோர் கொடுக்கச் சொன்னதாக சிறுவனிடம் கொடுத்து, அதனை அவர் குடித்து பலியான சம்பவத்தில் காரைக்கால் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சகாயமேரி, இன்று காரைக்கால் நீதிமன்ற நீதிபதி மோகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சிறுவன் கொலை வழக்கில், சகாயமேரி விக்டோரியா குற்றவாளி என்றும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில், காரைக்கால் மாவட்டம் நேரு நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் நியாயவிலைக் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பாலமணிகண்டன் (13) அங்குள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து வந்த இவர், பல்வேறு கலைகளையும் பயின்று வந்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி, பள்ளியில் ஆண்டு விழா ஒத்திகை நடந்து கொண்டிருந்தபோது, வீடு திரும்பிய பாலமணிகண்டன், தனக்கு பள்ளிக்குக் கொண்டு வந்து குளிர்பானம் கொடுத்தீர்களா என்று கேட்டுள்ளார். ஆனால், தாய் மாலதி அவ்வாறு தான் கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

அப்போது திடீரென பாலமணிகண்டன் வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்துள்ளார். அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது, அவருடன் பள்ளியில் படிக்கும் அருள்மேரியின் தாய் சகாயமேரி, குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளிக் காவலாளி மூலம் பால மணிகண்டனுக்குக் கொடுத்தது தெரிய வந்தது.

உடனடியாக சகாயமேரி கைது செய்யப்பட்டபோதுதான், வகுப்பில், தன் மகளை விட பால மணிகண்டன் நன்றாக படிப்பதால், படிப்பில் ஏற்பட்ட போட்டியால் சிறுவனை, சக மாணவியின் தாய் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு, புதுச்சேரி மகளிர் சிறைச்சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நடந்து வந்த விசாரணையில், மகளைவிட நன்றாக படித்த மாணவனைக் கொலை செய்த வழக்கில், சகாயமேரி விக்டோரியாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Woman sentenced to life imprisonment for murdering student who was better educated than her daughter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமனாருக்கு கத்திக் குத்து: மருமகன் மீது வழக்கு

சந்தன மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு

கண்மாய் மராமத்துப் பணிகள் தாமதம்: 150 ஏக்கா் விவசாய நிலங்களில் புகுந்த மழைநீா்

திருப்பாலைக்குடியில் மழை நீா் தேக்கம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT