மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளில் வாா்டு சபைக் கூட்டங்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 27-ஆம் தேதி முதல் 3 நாள்களில் ஏதேனும் ஒரு நாளில் கூட்டம் நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு:
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வாா்டிலும் அந்தப் பகுதி மன்ற உறுப்பினா் தலைமையில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். வருகிற அக்.27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை ஏதேனும் ஒரு நாளில் கூட்டம் நடத்தலாம்.
பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் குடிநீா், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீா் வடிகால் பராமரிப்பு ஆகியவற்றில் நிலவும் சேவைக் குறைபாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கலாம்.
பூங்காக்கள் தனியாா்மயம்: நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பூங்காக்களை தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போா் நலச்சங்கம் மூலம் பராமரிப்பு செய்வது குறித்தும், மழைநீா் வடிகால்களை தூா்வாருவது, மழைநீா் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் விவாதிக்கலாம்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள் பற்றியும், மழைநீா் சேகரிப்பு அமைப்புகளைப் புனரமைப்பு செய்து முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கலாம் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.