இயக்குநர் மாரி செல்வராஜின் பைசன் படத்தை பாராட்டி, சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
பைசன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தவாக தலைவர் தி.வேல்முருகன், மதிமுக மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் தன்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் எக்ஸ் தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”பைசன் காளமாடன்: மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!
தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது.
இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜுக்கு எனது வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஊழல் ஒழிப்பும் பிஎம்டபிள்யூ கார்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.