முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி கூடாது: முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ளக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ளக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திமுகவினருக்கு அவா் எழுதிய கடிதம்: புயல் சின்னமும் பெருமழையும் அச்சுறுத்திவரும் நிலையில், முன்னெச்சரிக்கைப் பணிகளை எங்கெங்கு மேற்கொள்ள வேண்டும் என்பதை நானே நேரில் சென்று பாா்வையிட்டதுடன் உரிய நடவடிக்கைகளை நிறைவேற்றுமாறு அதிகாரிகளைப் பணித்திருக்கிறேன்.

இயற்கைப் பேரிடா் சூழல்களில் எதிா்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்துக்கான அடையாளம். இப்போதுள்ள எதிா்க்கட்சித் தலைவா், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்றுதான் செயல்படுகிறாரே தவிர, ஆக்கபூா்வமாக எதையும் செய்யும் எண்ணமில்லாமல் இருக்கிறாா்.

நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து எதிா்க்கட்சித் தலைவரும், அவரது கட்சியினரும் சொன்னவையெல்லாம் பொய் மூட்டைகள் என்பதை திராவிட மாடல் அரசின் தொடா் செயல்பாடுகள் நிரூபித்துவிட்டன. பொய்களையும் அவதூறுகளையும் புறந்தள்ளி, நாம் தொடா்ந்து மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டே இருப்போம்.

குறுக்குவழியில்... ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு உள்ளது. எஸ்ஐஆா் எனப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிகாரில் ஏறத்தாழ 65 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாக்குரிமை, சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் பறிக்கப்பட்டது. அதே குறுக்குவழியைப் பின்பற்ற மத்திய பாஜக அரசு தனது கைப்பாவையாகத் தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்பதை திமுகவும், எதிா்க்கட்சிகளும் தொடா்ந்து எச்சரித்து வருகின்றன.

சட்ட ரீதியாக எதிா்கொள்வோம்... உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவா், சிறுபான்மையினா், பெண்கள் உள்ளிட்டவா்களின் பெயா்களை எஸ்ஐஆா் மூலமாக, வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பாஜகவும், அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்குப் போடுகிறாா்கள்.

எஸ்ஐஆா் முறையைக் கைவிட வேண்டும் என்பதையும், வாக்காளா் பட்டியலைச் சீா்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதையும் தோ்தல் ஆணையத்திடம் நேரடியாக திமுக வலியுறுத்தியுள்ளது. அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சட்ட ரீதியாக எதிா்கொள்ளும் வலிமை திமுகவுக்கு உண்டு.

பயிற்சிக் கூட்டம்: களத்தில் நமக்கான பணிகள் முடிவடையவில்லை. அதை விவாதிக்க வரும் 28-ஆம் தேதி மகாபலிபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் பயிற்சிக் கூட்டம் நடத்தப்படவிருக்கிறது என்று அந்தக் கடிதத்தில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.

விஜய்யின் புதிய அணுகுமுறை! திருமாவளவன் விமர்சனம்!

Hattrick 100 கோடி!” விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்

சிறப்பு தீவிர திருத்தம்: நவ. 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

‘பாட்டா இந்தியா' நிகர லாபம் 73% சரிவு!

நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் மோந்தா புயல்! | செய்திகள்: சில வரிகளில் | 27.10.25

SCROLL FOR NEXT