சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகிலுள்ள முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் குளிர்சாதன மினி பேருந்துகளை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் 2015 ஆம் ஆண்டு முதன்முதலாக விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை 32 கி.மீட்டருக்கு மெட்ரோ திட்டம் கொண்டுவரப்பட்டது.
தற்போது நீல நிறப்பாதை, பச்சை நிறப்பாதை என இரு வழிகளில் 41 நிலையங்களுடன் சென்னை மெட்ரோ விரிவடைந்துள்ளது. மக்கள் மத்தியில் மெட்ரோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர்.
மேலும், 108.9 கி.மீ. தொலைவுக்கு ரயில்களை இயக்கவும், 128 நிலையங்கள் அமைக்கவும் நகரின் பல்வேறு பகுதிகளில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அருகிலுள்ள முக்கிய பகுதிகளை இணைக்க பயணிகளின் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநகரப் பேருந்துகளும், மினி பேருந்துகளும் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து முக்கிய பகுதிகளை இணைக்க 220 குளிர்சாதன மினி பேருந்துகளை ஒப்பந்த முறையில் இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் டெண்டர் விட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.