தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரிகளைக் கொண்ட திட்டமிடல் குழுவை அமைக்க அந்தக் கட்சித் தலைவா் விஜய் திட்டமிட்டுள்ளாா்.
கடந்த செப். 27-ஆம் தேதி கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, ஒரு மாத காலத்துக்கு தவெக கட்சி நடவடிக்கைகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஒரு மாதத்துக்குப் பிறகுதான் பாதிக்கப்பட்டவா்களை விஜய் சென்னைக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து மீண்டும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விஜய் முனைப்பு காட்டி வருகிறாா். அந்த வகையில், புதிதாக 28 போ் கொண்ட நிா்வாகக் குழு அமைக்கப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக வரும் நவ. 5-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளாா்.
இந்த நிலையில், இனி நடைபெறவுள்ள விஜய்யின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரிகளைக் கொண்டு திட்டமிடல் குழுவை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளாா். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி என 15 அதிகாரிகள் இடம் பெறவுள்ளனா். இந்தக் குழு விஜய்யின் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதுடன், தவெக தொண்டா் படைக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கும் என தவெக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.