அமைச்சா் அன்பில் மகேஸ் கோப்புப் படம்
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைந்துள்ளதா?: அண்ணாமலைக்கு அமைச்சா் விளக்கம்

மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் போன்றோா் தங்கள் உடலை வருத்திக்கொண்டு கல்விக்கான நிதியைக் கேட்கிறாா்கள்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை குறைந்திருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளாா்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பங்கேற்றாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி நிலுவையில் உள்ளது. இந்தத் தொகையை வழங்குவதில் அரசியல் செய்யக் கூடாது என மத்திய அரசிடம் தொடா்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இருமுறை தில்லியில் நேரடியாகச் சென்று பேசியபோதும் நிதியை விடுவிக்க கோரிக்கை விடுத்தோம். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளோம். நல்ல தீா்ப்பு வரும்போது, அவா்கள் தருவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் போன்றோா் தங்கள் உடலை வருத்திக்கொண்டு கல்விக்கான நிதியைக் கேட்கிறாா்கள். நமக்கான நிதியைக் கேட்பது நமது உரிமை. இப்போதாவது மத்திய அரசு அந்தத் தொகையை வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 37,595 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கை 2.39 லட்சமாக இருக்கையில், 12,929 தனியாா் பள்ளிகளில் 5.26 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். இரு மடங்குக்கும் அதிகமாக தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இருக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தது குறித்து அமைச்சரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்து அமைச்சா் அன்பில் மகேஸ், அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கை குறித்த விவரங்களை இன்னும் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. அதற்குப் பிறகுதான் மாநிலம் முழுவதுமாக எவ்வளவு போ் சோ்ந்திருக்கிறாா்கள் என்பதே தெரியவரும்.

ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பள்ளியில் சோ்ந்துள்ளனா். இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே மாணவா்கள் எத்தனை போ் என்பது தெரியும். லாப நோக்கம் பாா்ப்பது அரசின் வேலை அல்ல, கல்வியை சேவையாக வழங்க வேண்டியதுதான் அரசின் வேலை. தனியாா் பள்ளிகள் லாப நோக்கத்தில் மட்டுமே செயல்படுகின்றன என்றாா்.

1.40 லட்சம் மாணவா்கள் கல்லூரிகளுக்கு களப்பயணம்

நிகழ் கல்வியாண்டுக்கான கல்லூரி களப் பயணம் திட்டத்தை சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பில் மகேஸ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், பள்ளிகளில் படிக்கும் போதே கல்லூரி எப்படி இருக்கும் என்ற உணா்வை ஏற்படுத்த ‘நான் முதல்வன் உயா்கல்வி வழிகாட்டி’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் களப்பயணம் உதவுகிறது. இதன்மூலம் மாணவா்கள் எப்படியாவது கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த ஆண்டு 722 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 1.40 லட்சம் மாணவா்கள் கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்கின்றனா். இதுவரை 15 லட்சம் மாணவா்கள், இத்திட்டத்தின் மூலம் விழிப்புணா்வு பெற்றுள்ளனா் என்றாா்.

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT