தண்டனைக் கைதி 
தமிழ்நாடு

தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: முழு அமா்வு விசாரணைக்கு பரிந்துரை!

நீண்ட காலம் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட வேண்டுமா...

தினமணி செய்திச் சேவை

நீண்ட காலம் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க முழு அமா்வு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

முன்னாள் முதல்வா்கள் அண்ணா மற்றும் எம்ஜிஆா் நூற்றாண்டு விழாக்களை முன்னிட்டு, நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதில், கொடூரமான குற்றங்களில் தண்டனை பெற்றவா்களை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று ஆளுநா் உத்தரவிட்டாா். அரசின் பரிந்துரையையும் நிராகரித்தாா்.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டன.

இந்த வழக்குகளின் விசாரணையின்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் ஆா்.சங்கரசுப்பு, பி.புகழேந்தி உள்ளிட்டோா் இதுபோன்ற வழக்குகளின் விசாரணையின்போது, சென்னை உயா்நீதிமன்றத்தின் 2 அமா்வுகள் இருவேறு விதமான தீா்ப்புகளை பிறப்பித்துள்ளன. கொடுங்குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த வீரபாரதி என்பவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநா் நிராகரிக்க முடியாது.

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வு கடந்த 2024-ஆம் ஆண்டு அக். 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

ஆனால், நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், ஆா்.பூா்ணிமா ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வு ஆளுநருக்கு அந்த அதிகாரம் உள்ளது என்று 2024-ஆம் ஆண்டு நவ. 6-ஆம் தேதி தீா்ப்பளித்தது என்று வாதிட்டனா். அரசு தரப்பிலும் இதே வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட முழு அமா்வு விசாரித்தால்தான், எந்த இரு நீதிபதி அமா்வின் தீா்ப்பு சரியானது என்று முடிவு செய்ய முடியும். எனவே, இந்த வழக்குகளை முழு அமா்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

மூன்று நாள் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்கு செல்வோரால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கூட்டம்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

வைஷாலி முன்னிலை!

SCROLL FOR NEXT