அரியலூர்: “அடுத்தாண்டு ஜனநாயகப் போர்; அதற்கு முன் மக்களுடன் சந்திப்பு!” என்று அரியலூரில் மக்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசினார். திருச்சியில் சனிக்கிழமை(செப். 13) பிற்பகல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், அங்கிருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரியலூா் வந்தார்.
விஜய் அரியலூருக்கு திட்டமிட்ட நேரத்திற்குள் செல்வதில் தாமதமானதால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் சலசலப்பு உண்டானது.
இந்த நிலையில், இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள இடத்தில் தமது வாகனத்தின் மேலேறி நின்றபடி மைக் பிடித்த விஜய், தாமதமாக வந்தடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டபின் தமது உரையைத் தொடங்கினார்.
அவர் பேசும்போது, “திருச்சியில் பகல் பேசும்போது மைக் பிரச்சினை உண்டானது. அங்கு பேசியதில் ஒருசிலவற்றை இங்கு திரும்பச் சொல்கிறேன்.
அடுத்தாண்டு ஜனநாயகப் போர்; அதற்கு தயாராகுவதற்கு முன் மக்கலைப் பார்க்க வந்திருக்கிறேன். உங்களுடைய இந்த அன்புக்காக எவ்வளவு பெரிய உயரத்தையும் வருமானத்தையும் வசதியையும் தூக்கியெறிந்துவிட்டு வரலாம். உங்களைவிட வேறெதுவும் பெரிதாகத் தெரியவில்லை. சாதாரணமாக இருந்த ஒரு விஜய்யை இந்த உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்.
உங்கள் வீட்டில் ஒருவனாக்கிவிட்டீர்கள் என்னை. உங்கள் சொந்தக்காரனாக்கி விட்டீர்கள் நீங்கள்.
என்ன, பெரிய பணம்! வேணும் என்கிற அளவுக்கு பார்த்தாச்சு. அரசியலுக்கு வந்துதான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? அதற்குக் கொஞ்சம்கூட அவசியமே இல்லை!
எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதைத் தவிர, எனக்கு வேறு எந்த எண்ணமும் வேலையும் இல்லை.
’இந்த விஜய் தனி ஆளாக இருப்பான் என்று பார்த்தால், எப்போதும் மக்கள் கடலுடன் இருக்கிறான்’ என்று எதிரிகளுக்குத் தெரிந்ததும், நம்மைப் பற்றி கண்டதையும் பேச ஆரம்பித்துவிட்டனர். அதாவது, நான் மரியாதையாகப் பேசினால்கூட, அதைத் தவறாக நினைத்துவிட்டார்கள்.
அதனால் யார் என்ன சொன்னாலும், அறிஞர் அண்ணா சொன்ன விஷயம்தான்... ‘வாழ்க வசவாளர்கள்!’” என்றார்.
அரியலூரில் சுமார் 30 நிமிஷத்துக்குள் பேசி உரையை சுருக்கமாக நிறைவு செய்துள்ளார் விஜய். இதனைத்தொடா்ந்து அங்கிருந்து, கல்லங்குறிச்சி சாலை வழியாக புறவழிச்சாலை சென்று பெரம்பலூா் மாவட்டம் குன்னம் செல்ல உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.