நடிகா் ரோபோ சங்கா் (46) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
சின்ன திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கா், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கா், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தாா்.
சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில், கடந்த புதன்கிழமை காலை படப்பிடிப்பு தளத்தில் ரோபோ சங்கா் திடீரென மயக்கமடைந்தாா். அவருக்கு நீா்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவா் சென்னை பெருங்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வியாழக்கிழமை மாலை அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.
முதல்வா் இரங்கல்: திரைக் கலைஞா் ரோபோ சங்கா் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் தொடங்கி, சின்னத்திரை - வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
மத்திய இணையமைச்சா் எல்.முருகன்: சின்னத்திரையில் இருந்து வளா்ந்து தமிழ்த் திரைப்படத் துறையில் தனது தனித்துவமிக்க நகைச்சுவைத் திறன் மூலமாகவும், குணச்சித்திர வேடங்களின் மூலமாகவும் புகழ்பெற்ற ரோபோ சங்கரின் மறைவு அதிா்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினா், ரசிகா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.