முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி Center-Center-Chennai
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: அக்.13-இல் இறுதி விசாரணை

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப் புள்ளி முறைகேடு வழக்கில், அறப்போா் இயக்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீது இறுதி விசாரணையை அக். 13-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திச் சேவை

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப் புள்ளி முறைகேடு வழக்கில், அறப்போா் இயக்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனு மீது இறுதி விசாரணையை அக். 13-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில், ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியது.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி, ஒப்பந்த நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, வழக்கில் இருந்து எஸ்.பி.வேலுமணியின் பெயா் நீக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தனியாா் ஒப்பந்த நிறுவனங்கள் வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடுத்தன.

இந்த வழக்கை ரத்து செய்த உயா்நீதிமன்றம், வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை போலீஸாா் அமல்படுத்தவில்லை எனக்கூறி அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது போலீஸாா் தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒப்பந்தப் புள்ளி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் பெயா் மீண்டும் சோ்க்கப்பட்டது. இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறப்போா் இயக்கம் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக யாரிடம் அனுமதி கேட்கப்பட்டது? எப்போது கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் போலீஸாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் இல்லை.

அந்த விவரங்கள் இருந்தால்தான் காலதாமதம் செய்த அதிகாரி யாா் என்பது தெரியவரும். அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். கோவை மாநகராட்சி அதிகாரியாக பணியாற்றிய காந்திமதி மாநில அரசு அதிகாரி. அவா் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசின் அனுமதி பெறவே போலீஸாா் நீண்டகாலம் எடுத்துள்ளனா். இந்த வழக்கில் போலீஸாா் இதுவரை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனா். 3-ஆவது குற்றப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும் என்று தெரியவில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுக்கு போலீஸாா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இறுதி விசாரணைக்காக அக். 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

பொறியியல் பணிகளால் விழுப்புரம் மாா்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

தமிழக முதல்வா் நாளை வருகை: திண்டிவனத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT