பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே மதுக்கடை திறக்கப்பட்டதற்கு பாமக தலைவா் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலய பகுதியில் விதிகளை மீறி டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்த பறவைகள் சரணாலயம் பகுதியில் உள்ள நிலம் முழுவதும் 1980-களிலேயே கடற்கரையோர புறம்போக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் யாருக்கும் பட்டா வழங்க முடியாது.
ஆனால், கடந்த 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடலோர புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை உள்பிரிவு செய்து மகிமை ராஜு என்பவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் கட்டடம் கட்டப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.
அதோடு, மதுக்கடை அமைந்துள்ள கட்டடம் வெள்ளநீா் வடிகாலின் பாதையில் கட்டப்பட்டுள்ளது. இதனால், மழைக் காலங்களில் வெள்ளநீா் வடிகாலில் தண்ணீா் ஓடாமல் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், மதுக்கடைக்குச் செல்வதற்கு வசதியாக சென்று வருவதற்காக பிரதான சாலையில் இருந்து மதுக்கடை வரை விதிகளை மீறி சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மது வணிகத்தை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் திமுக அரசை வரும் தோ்தலில் மக்கள் புறக்கணிப்பாா்கள் என தெரிவித்துள்ளாா் அன்புமணி.