நெல்லை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்று முதல் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகரத்தில் கனரக வாகனங்களுக்கான தடை அத்தியாவசிய தேவையாக மக்கள் கருதுகின்றனர். மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து துறை வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கனரக வாகனங்களின் மாற்று பயன்பாட்டை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
கோ-ஆப் டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது கோ-ஆப்டெக்ஸ் விற்பனை குறித்து பேசிய அவர், பிறகு, நெல்லை மாநகர பகுதிகளில் இன்று முதல் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வரும் வாகனங்களுக்கு அபராதம் விக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அபராதம் விதிப்பது மட்டும் நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
மாநகரப் பகுதிகளில் வாகனங்கள் அதிகமாக வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி, பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்கள் பாதிக்கப்படுவது உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட லாரி முனையம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பது உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து இடையூறுகளை சரி செய்வதற்காக லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் அனைத்து துறை வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் இந்த தடை பொருந்தாது.
சென்னை, மதுரை போன்ற வளர்ச்சி மிகுந்த நகரங்களில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இது போன்ற மாற்றங்கள் கொண்டு வந்ததை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை உள்ளிட்டவைகள் வரும் நிலையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிவுகளை பொறுத்து அடுத்த கட்ட மாற்றங்கள் செய்யப்படும். இந்த மாற்றம் அத்தியாவசிய மாற்றமாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த புதிய திட்ட மூலம் மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.