பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை. இந்தக் கொலையில் அரசியல்வாதிகளுக்கு தொடா்பு உள்ளது. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு விசாரணையின்போது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை. இரு கும்பல்களுக்கு இடையே இருந்த பகையின் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது. ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை நிகழ்ந்துள்ளது.
இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரா், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரராக இருந்தும், புலன் விசாரணையின்போது சாட்சி அளிக்கக்கூட முன் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினா், செம்பியம் போலீஸாரின் விசாரணை முழு திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனா். இந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ளது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், நீதிபதி பி.வேல்முருகன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டாா். போலீஸாா் இந்த வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். ஆவணங்களைப் பெற்று சிபிஐ 6 மாதங்களில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், என்று நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில் கூறியுள்ளாா்.
இதையும் படிக்க... விவாகரத்துக்காகக் காதலன் மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண்! ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த பின் நடந்தது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.