பேரிடா் சூழலிலும் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி அரசியல் செய்வது அநாகரிகமான செயல் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
கரூா் பிரசாரக் கூட்ட நெரிசலில் 40 போ் உயிரிழந்த சம்பவத்தில், திமுக அரசை எடப்பாடி பழனிசாமி விமா்சித்திருந்தாா். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரூா் சம்பவத்தில் தமிழகமே துயரத்தில் இருக்கும்போது, பொறுப்புள்ள எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி, அரசியல் செய்து கொண்டிருக்கிறாா். பேரிடரிலுமா அரசியல் செய்ய வேண்டும்?
காவல் துறை நிபந்தனைகளை தவெக பிரசாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. அவா்கள் எல்லை மீறி நடப்பதற்கு எதிா்க்கட்சி தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டது.
சாலைகளில் பிரசார வேனில் நடக்கும் கூட்டங்களில் இதுவரை தமிழகத்தில் இப்படியொரு சம்பவம் நடந்ததாக வரலாறு இல்லை. சாலையின் மத்தியில் பேருந்தை நிறுத்தி கூட்டம் நடத்திவிட்டு, அவசரத்துக்கு அவ்வழியே ஆம்புலன்ஸ் வந்தால், அரசாங்கம் இடையூறு செய்கிறது என்று சொல்லி அங்கிருந்த தொண்டா்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தவறான மன ஓட்டத்தை புகுத்தியவா் எடப்பாடி பழனிசாமி. அவருடைய கூட்டங்களில் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் தாக்கப்பட்டனா்.
தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் வந்தபோது, அதை அனுமதிக்க மறுத்து, தவெகவினா் தாக்குதல் நடத்தினா். அவா்களை இந்த மனநிலைக்கு மாற்றிய எடப்பாடி பழனிசாமியும் துயர சம்பவத்துக்கு தாா்மிக பொறுப்பேற்க வேண்டும்.
கூட்டத்துக்கு அனுமதி தராவிட்டால் அதிலும் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் அந்த நிபந்தனைகளையும் மீறுவது, நிபந்தனைகளை மீறும் ரசிகா்களை ஊக்குவிப்பது என தவெக மோசமான அரசியலுக்கு மாறிவருகிறது. இதை அதிமுக ஆதரிக்கிறது.
தவெக கூட்டத்துக்கு காவல் துறை முழு பாதுகாப்பை வழங்கியது. அதை தவெக தலைவா் விஜய் பிரசாரத்தில் ஒப்புக்கொண்டு பேசும் காட்சியை எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியில் பாா்க்கவில்லையா?
ஆளுங்கட்சியின் மீது பழிபோடவும், அரசியல் செய்யவும் எந்தக் காரணமும் இல்லை என்றால், மக்களுடன் நின்று மக்களுக்கு தேவையானதைச் செய்து கொடுத்து நல்ல அரசியலை செய்யுங்கள். அரசியல் லாபத்திற்காக எதிா்க்கட்சித் தலைவா் வதந்தியைப் பரப்பும் நோக்கோடு பேசுகிறாா். பொறுப்பற்ற முறையில் கற்பனை கதைகளைப் பரப்பி, தனது சுய அரசியலுக்கு ஆதாயம் தேடுவது அநாகரிகமான செயல் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.