கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் 10 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று இரவு காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் இரவு முழுவதும் விடிய விடிய சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் எஸ்பி, கரூர் நெரிசல் சம்பவ விசாரணை அதிகாரி உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜய் ஏன் தாமதமாக வந்தார்? வரும் வழியில் ஏன் விஜய் சாலை வலம் நடத்தினார்? காவல்துறை பல்வேறு எச்சரிக்கை கொடுத்தும் ஏன் கண்டுகொள்ளவில்லை? என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இன்று கரூர் மத்திய மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜை காவல் துறையினர் இன்று (செப்.30) காலை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.