முகப்பு
தமிழ்நாடு

உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்யப்பட்டவர்கள் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்

உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்

Updated On : 1 ஏப்ரல், 2026 at 4:56 AM
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பிரசாரம் - DPS
பகிர்:

கோவை: உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா அல்லது இறக்குமதி செய்யப்பட்ட வெளியூர் வேட்பாளர்கள் வேண்டுமா? என்று அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

கோவை இடையர் வீதி பகுதியில் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்த அவர் அனைவரும் அம்மன் அர்சுணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிரசாரத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி இந்த தொகுதியில் அதிகப்படியான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்திய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் என்றும் கடந்த ஐந்தாண்டு காலமாக கோவையில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்றார்.

கோவையில் அதிகமான ஸ்மார்ட் சிட்டி பணிகள், மேம்பாலங்கள் ஆகியவை அதிமுகவினால்தான் கொண்டுவரப்பட்டது என தெரிவித்தார்

அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுகவினர் அந்த வீடுகளை விலைக்கு விற்று வருகிறார்கள் என தெரிவித்தார். அம்மன் அர்ஜுனன் நம்மில் ஒருவர், யார் எப்போது கூப்பிட்டாலும் உடனடியாக வருபவர், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அனைவரும் இறக்குமதி செய்யப்பட்ட வெளியூர் வேட்பாளர்கள் என விமர்சித்தார்.

1000 ரூபாய் கொடுக்கிறோம் 3000 ரூபாய் கொடுக்கிறோம் என்று ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்த அவர் 28 மாதங்கள் கழித்து மகளிர் உரிமைத்தொகை கொடுத்தார்கள் அப்படி என்றால் 28,000 கொடுத்திருக்க வேண்டும் அல்லவா? என கேள்வி எழுப்பினார்.

இந்த ஐந்து வருடத்தில் மின்சார கட்டணம் எவ்வளவு செலுத்தி உள்ளீர்கள்? சொத்து வரி எவ்வளவு செலுத்தி உள்ளீர்கள்? மளிகை பொருள்கள் எவ்வளவு வாங்கினீர்கள்? என்று கணக்கு போட்டுப் பாருங்கள். இந்த ஐந்து வருடத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 5 லட்சம், 6 லட்சம் திமுக பிடுங்கி உள்ளார்கள் என்றும் அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து லட்சம் மீதம் ஆகி இருக்கும் என்றார்.

கோவையில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி உள்ளது. சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவியை எரித்து கொன்றார்கள். காவல்துறையினர் உடனடியாக சென்று உடலை டிஸ்போஸ் செய்தார்கள். அதனை பத்திரிகையாளர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை என்றார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும் பொழுது மோடியும் அமித்ஷாவும் பல்வேறு திட்டங்களை கொடுத்தார்கள். அமெரிக்கா, ஈரான் போரினால் மற்ற நாடுகளுக்கு எல்லாம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் இல்லை, ஐந்து எண்ணெய் கப்பல்களை அழகாக கொண்டு வந்து இறக்கி இருக்கிறார் பிரதமர் மோடி என புகழ்ந்தார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து ஓட்டு வாங்கி செல்லும் வெளியூர் வேட்பாளர்கள் நமக்கு வேண்டுமா? உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு திட்டங்கள் வருவதற்கு அம்மன் அர்ஜுனன் தான் காரணம் என தெரிவித்தார்.

மற்றவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்ததும் ஊருக்கு சென்று விடுவார்கள். ஒரு வாக்குகள் கூட மற்ற கட்சிகளுக்கு செல்லக்கூடாது, தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்குகள் சென்றாலும் கூட அது செல்லாத ஓட்டு ஆகிவிடும் என்று அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள், தவெக-விற்கு திமுகவை திட்டுவதை விட வேறு கொள்கைகள் இல்லை என்றார்.

அண்ணா திமுகவிற்கு, திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தும் வரும், அதனைப் பிரித்து விட்டால் திமுகவிற்கு வாய்ப்பாகிவிடும், எனவே அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

பிரச்சாரத்தில் பேசிய வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், அதிமுக செய்த திட்டங்களை கூறி காலரை தூக்கிக்கொண்டு வாக்கு சேகரிக்க செல்லலா,ம் அண்ணா திமுக என்றும் பயப்படாது. அதிமுக தர்மத்திற்கு கட்டுப்படுவது அதற்கு தான் பயப்படுவோம் என்றார்.

அதிமுக ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் வரும் என கூறினார். மேலும் நீங்கள் என்னை எங்கும் தேட வேண்டாம், ஒரு போன் கால் செய்தால் வீட்டு வாசலில் வந்து நிற்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.