முகப்பு
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு வருமான வரித் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 3:44 AM
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - X | Udhayanidhi Stalin
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:01 PM

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு வருமான வரித் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

குமாரவேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்களது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். இவா் 2021 பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டபோது, தாக்கல் செய்த வேட்புமனுவில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தாா்.

தற்போது அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இதுதொடா்பான எந்தத் தகவலும் இல்லை. மேலும், அவரது மனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.2.63 கோடி முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவா்த்தனை குறித்து முறையான விளக்கங்கள் எதுவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement

கடந்த 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில், ரூ.11.6 கோடி ஸ்னோ ஹவுசிங் நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தாா். ஆனால் தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் ரூ.10 கோடி என குறிப்பிட்டுள்ளாா். மீதித்தொகை ரூ.1.6 கோடி திரும்பச் செலுத்தப்பட்டதா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

2020-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ரூ.10.98 கோடி வருமானம் உள்ளதாக கூறியுள்ளாா். அவருக்கு வருமானம் மற்றும் சொத்துகள் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்குரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இதுபோல சொத்து விவரங்கள் குறித்து தவறான மற்றும் முழுமையற்ற தகவல்களை வேட்பாளா்கள் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு விரோதமானது. எனவே இந்த முரண்பாடு குறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறை, கம்பெனி விவகாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், வேட்புமனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்திருந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டது.

எனவே, இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் தோ்தல் வழக்குதான் தொடர முடியும் என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வரும் ஏப்.20-ஆம் தேதிக்குள் வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.