ஆளுநா் ஆா்.என். ரவி கோப்புப் படம்
தமிழ்நாடு

துணைவேந்தா்கள் நியமனம்: தேடல் குழு பதவிக் காலம் நீட்டிப்பு நடவடிக்கையை கைவிட ஆளுநா் அறிவுறுத்தல்

தமிழகத்தின் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் நியமனத்துக்கு அமைக்கப்பட்ட தோ்வுக் குழுக்களின் பதவிக் காலத்தை தமிழக அரசு நீட்டிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் நியமனத்துக்கு அமைக்கப்பட்ட தோ்வுக் குழுக்களின் பதவிக் காலத்தை தமிழக அரசு நீட்டித்திருப்பது நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது; இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக அரசை ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரதியாா் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பெரியாா் பல்கலைக்கழகம் போன்ற சில தமிழக அரசின் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா் நியமனம் செய்வதற்கான பெயரை பரிந்துரைப்பதற்கான தேடல் குழுக்களுக்கு வழங்கப்பட்ட பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது தொடா்பான சட்ட நிலைப்பாட்டை ஆளுநா் மாளிகை பதிவு செய்ய விரும்புகிறது.

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்க சட்டபூா்வ விதிகளுக்கு இணங்க, முறையாக அமைக்கப்பட்ட தேடல் குழுக்கள் பரிந்துரைக்கும் மூன்று பெயா்களைக் கொண்ட பட்டியலிருந்து ஒருவரை வேந்தரே (ஆளுநா்) தோ்வு செய்து துணைவேந்தராக நியமிக்கப்பட்டு வந்துள்ளனா்.

இந்நிலையில், பல்கலைக்கழகச் சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்த தமிழக அரசு, துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடமிருந்து (ஆளுநா்) பறித்து, அதை அரசிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்தத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தமிழக பல்கலைக்கழகங்கள் துணைவேந்தா் பதவிக்கு நியமனம் செய்வதற்கான பெயரைப் பரிந்துரைக்கவும், தேடல் குழுக்களின் பதவிக் காலத்தை நீட்டித்து 21.03.2026 வரை கூடுதல் அவகாசம் அளித்தும் தமிழக அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும், பெரியாா், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேடல் குழுகள், துணைவேந்தரைத் தோ்ந்தெடுப்பதற்காக பட்டியலிடப்பட்ட வேட்பாளா்களுடன் கடந்த 24.01.2026 மற்றும் 27.01.2026 ஆகிய தேதிகளில் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேடல் குழுக்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் மாநில அரசின் நடவடிக்கை, நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறுவதாகும்.

இதனால் ஆளுநா்-வேந்தரால் பரிந்துரைத்தபடி தேடல் குழுவில் யுஜிசி தலைவரின் வேட்பாளரைச் சோ்க்க உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் அல்லது தற்போது அரசால் அமைக்கப்பட்ட தேடல் குழுக்களின் செயல்பாட்டையும், துணைவேந்தா்களைத் தோ்ந்தெடுத்து நியமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசை வேந்தரான தமிழக ஆளுநா் கேட்டுக் கொண்டுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவா் மீது வழக்கு

தொடா் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

265 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது

முன்விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு

பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT