தமிழக அரசியலில் என்ஜின் என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் அமர்ந்தால் மக்களுக்கு பயன்பெறும் என்று தெரிவித்து பாஜக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை என்ஜின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அதேபோல மற்ற மாநிலங்களிலும் இரட்டை என்ஜின் ஆட்சி தொடர வேண்டும் என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “ ‘தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; டபுள் என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது.
திமுகவின் பிடியிலிருந்து நாங்கள் தமிழகத்தை விடுவிப்போம். தமிழகத்தில் அதிமுக, பாஜக இணைந்த இரட்டை என்ஜின் ஆட்சி அமையப்போவது உறுதியாகிவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடிக்கு எதிர்வினையாற்றிய முதல்வர், “பிரதமர் சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது!
நீங்கள் சொல்லும் “டபுள் என்ஜின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாரைவிட, உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கின்றன” என்று விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து, இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ”தமிழக முதல்வர் ஸ்டாலின் நீங்கள் ஒரு ட்ரபிள் என்ஜின் (trouble engine) ஆட்சியை நடத்திக் கொண்டு எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக டபுள் என்ஜின்(double engine) அரசை நடத்திக் கொண்டிருக்கும் மோடியை விமர்சிக்கிறீர்கள்.
குஜராத், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள், மாநில அளவில் வெற்றியை தருவது மட்டுமல்லாமல் மாநகராட்சி அளவில் வெற்றியை தந்து அது ட்ரிபில் என்ஜின் (triple engine) அரசாக மாறிக்கொண்டுள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நான்கரை ஆண்டுகளாக ஒரு அடிகூட நகராத, ஒரு "ஓடாத ஓட்டை என்ஜின் ஆட்சி”யை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவதாக விமர்சித்தார்.
மேலும், திமுக என்ற என்ஜின் இல்லாத காரை கூட்டணி என்கிற லாரி 10 ஆண்டுகளாக இழுத்துச் செல்வதாகவும் திமுக கூட்டணி என்ற லாரியில் அடிக்கடி பழுது ஏற்பட்டுக்கொண்டிருப்பதாகவும், இந்த கூட்டணி நிலைக்குமா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துவிட்டதாகவும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் தெரிவித்த திமுக இளைஞரனி தலைவரும் துணை முதல்வருமான உதயநிதி, தமிழ்நாட்டில் என்ஜின் இல்லாத கார் அதிமுக என்றும் அதனை பாஜக என்ற லாரி கட்டி இழுப்பதாகவும் விமர்சித்தார்.
இதனிடையே, நேற்று(பிப். 3) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது தொடக்க விழாவில் பேசிய விஜய், “டப்பா என்ஜின், ஓட்ட என்ஜின் எது வந்தாலும் நாம்தான் டாப் என்ஜின்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பேசும்போது, “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை பொறுத்தவரை, அவரிடம் என்ஜின் இருப்பதாக தெரியவில்லை.
எங்களிடம் டபுள் இன்ஜின் இருக்கிறது. அவரது இன்ஜினில் ஆயில் இருக்கிறதா ? வண்டி இல்லை, சேஸ் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, அதை ஸ்டார்ட் செய்வதற்குகூட ஆள்கள் இல்லை.
இவர்களெல்லாம் பாரதிய ஜனதா கட்சியைப் பார்த்து டப்பா என்ஜின் என்று கூறுகிறார்கள்” என்று எதிர்வினையாற்றினார்.
விஜய்யிடம் என்ஜின் இருக்கிறா என்ற கேள்விக்கு 2026 பேரவைத் தேர்தலில் முடிவு தெரியும்.
இவ்வாறாக என்ஜின் என்ற சொல் தமிழக அரசியலைச் சுற்றி வந்துக்கொண்டிருக்கும் நிலையில், இது முடிவுதான் என்ன என்று பார்த்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தல்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.