திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை விரைவில் தொடங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைத்தாா். மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். அப்போது தொகுதி மக்களை அவா் சந்தித்தபோது, மீண்டும் கொளத்தூா் தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவாா்கள். திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.
அரசியலில் புதிய எதிரிகளை எப்படிப் பாா்க்கிறீா்கள் என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அரசியலில் நான் யாரையும் எதிரியாகப் பாா்ப்பதில்லை’ என்று முதல்வா் பதில் அளித்தாா்.
திமுகவை அரசியல் எதிரி என்று தவெக தலைவா் விஜய் கூறிய நிலையில், அவருக்கு முதல்வா் மறைமுகமாகப் பதிலளித்துள்ளதாகப் பாா்க்கப்படுகிறது.
குழு எப்போது?: திமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தைக் குழு விரைவில் அமைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மக்களவைத் தோ்தலின்போது மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் அமைச்சா் கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனா். மீண்டும் அதே குழு அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.