நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாநிலம் தொடர்புடைய சில விஷயங்களையும் மத்திய அரசுக்கு சில கேள்விகளையும் இரு அவைகளில் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:
மக்களவையில்...
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை திட்ட தாமதம் ஏன்?
தென் சென்னை தொகுதி உறுப்பினர் (திமுக) தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீபெரும்புதூர்-காரப்பேட்டை இடையிலான ரூ. 341 கோடி திட்டம் தொடர்ந்து தாமதமாவதற்கான காரணத்தை கேள்வியாக எழுப்பியதற்கு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில்: தேசிய நெடுஞ்சாலை 48-இன் கீழ் வரும் ஸ்ரீபெரும்புதூர் காரப்பேட்டை பிரிவை 6 வழிச்சாலையாக மாற்றும் பணியானது, பூந்தமல்லி - வாலாஜாபேட்டை பிரிவை 6 வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பல்வேறு காரணங்களால் முன்பு தாமதமான மொத்தமுள்ள 34 கி.மீ தூரத்தில் 17.2 கி.மீ. தொலைவுக்கு விரைவுச்சாலை பணி தற்போது முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொலைவுக்கு புதிய ஒப்பந்தம் 2025 ஜனவரியில் வழங்கப்பட்டு வரும் அக்டோபருக்குள்ளாக முடிவடையும். 106 கி.மீ. தூரமுள்ள பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை திட்டத்தில் எழுந்த பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு விட்டன என அமைச்சர் கூறியுள்ளார்.
நனவாகாத ரயில்வே சுரங்கப் பாலம்!
சேலம் உறுப்பினர் (திமுக) டி.எம்.செல்வகணபதி, "சேலம், ஜாகீர் அம்மாபாளையம் அருகே உள்ள சின்ன மொட்டூர், அருந்ததியர் காலனி மக்கள், சேலம்-ஓமலூர் ரயில் பாதைக்கு இடையில், சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டிக்கு அருகிலுள்ள இடுகாட்டுக்கு அருகே ஒரு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி வருகின்றனர். பல வருட காத்திருப்புக்குப் பிறகு கோரிக்கைக்கு ரயில்வே துறை ஒப்புக்கொண்டாலும் உகந்த இடம் அடையாளம் காணப்படவில்லை. இதனால், ரயில் பாதையை கடக்க உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வாக ரயில்வே சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும்' என்றார்.
உடான் திட்டத்தில் புதிய நிலையங்கள் வருமா?
உடான் திட்டங்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), ஜி. செல்வம் (காஞ்சிபுரம்) எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் கிஞ்சிரப்பு ராம்மோகன் நாயுடு அளித்த பதில்: உடான் திட்டத்தின்கீழ், திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் புதிய விமான நிலையம் ஏதுமில்லை. எனினும், 2025-இல் காஞ்சிபுரத்தில் பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உடான் திட்டத்தின்கீழ் விமான ஓடுபாதை தளத்தை தமிழக அரசு உறுதிப்படுத்தினால், அங்கு அத்திட்டம் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
உள்ளூர் கலாசாரம் பராமரிக்கப்படுமா?
தருமபுரி உறுப்பினர் (திமுக) ஏ. மணி, தனது தொகுதியில் உள்ள பாரம்பரிய தலங்கள், கிராமிய கலை பாரம்பரியம், பழங்குடியின கலாசார நடைமுறைகளை மத்திய அரசு அதன் திட்டங்களின் கீழ் ஆவணப்படுத்தியுள்ளதா என்று கேட்டதற்கு, மத்திய கலாசாரம், சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதில்: இந்திய தொல்லியல் துறையின் வரம்புக்கு உள்பட்டு சென்ராயபெருமாள் கோயில் உள்ளது. அக்கோயிலின் பராமரிப்புக்காக நிகழ் நிதியாண்டான 2025-26இல் 35.67 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த தஞ்சாவூரில் உள்ள தென் மண்டல கலாசார மையம் ஆண்டுதோறும் நடவடிக்கை எடுக்கிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில்...
தமிழகத்தில் மாதவிடாய் திட்டத்துக்கு மத்திய அரசு உதவுகிறதா?
அதிமுக உறுப்பினர் எம். தனபால் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் அளித்துள்ள பதிலில், "தமிழக அரசு, அதன் சொந்த வழிமுறைகள் மூலம் மக்கும் தன்மையுள்ள சானிட்டரி நாப்கின்களை (புது யுகம் பேட்கள்) வழங்குவதன் மூலம், பாதுகாப்பான மாதவிடாய் சுகாதார பொருள்கள் பயனாளிகளுக்கு கிடைப்பதை ஊக்குவிக்கிறது. 2024, நவம்பரில் வெளியிடப்பட்ட பள்ளி செல்லும் சிறுமிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதாரக் கொள்கையின்படி, மாதவிடாய் சுகாதார பொருள்கள் கிடைப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் மாதவிடாய் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளை தேசிய சுகாதார இயக்ககத்தின் மறுஆய்வு நடவடிக்கைகள் மூலம் மதிப்பாய்வு செய்கிறோம்' என்று கூறியுள்ளார்.
ஈரோட்டில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பற்றாக்குறையா?
திமுக உறுப்பினர் அந்தியூர் பி. செல்வராஜ் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்துள்ள பதிலில், "பொது சுகாதாரம் மாநில பட்டியலில் உள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், அந்தியூர் மற்றும் தாளவாடி உள்பட அனைத்து இடங்களிலும் ஆயுஷ் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், போதிய மருந்தக உள்கட்டமைப்பு இருப்பதையும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை, காலியிடங்களின் நிலை, மருந்து விநியோகத்தில் உள்ள பற்றாக்குறைகள், மக்கள் தொடர்பு முகாம்கள் குறித்த தரவுகளைப் பராமரிப்பதற்கும் முதன்மைப் பொறுப்பு அந்தந்த மாநில அரசுக்கே உண்டு. தமிழக அரசு அளித்த தகவலின்படி, ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களின் பணியிடங்கள் அரசு விதிமுறைகளின்படி நிரப்பப்பட்டு வருகின்றன. தடையற்ற ஆயுஷ் சேவைகளை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.