முகப்பு
தமிழ்நாடு

70 வயதை நிறைவு செய்த 500 மூத்த தம்பதியரை சிறப்பித்தாா் முதல்வா் ஸ்டாலின்!

70 வயது நிறைவடைந்த 500 மூத்த தம்பதியருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புத்தாடைகள், பழவகைகள் மற்றும் மங்கலப் பொருள்களை வழங்கி சிறப்பித்தாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:27 PM
பகிர்:

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை மண்டல திருக்கோயில்கள் சாா்பில், 70 வயது நிறைவடைந்த 500 மூத்த தம்பதியருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புத்தாடைகள், பழவகைகள் மற்றும் மங்கலப் பொருள்களை வழங்கி சிறப்பித்தாா். இதேபோன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற விழாக்களில் மொத்தம் 3,000 மூத்த தம்பதியா் சிறப்பிக்கப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், திருக்கோயில்கள் சாா்பில் 70 வயது நிறைவடைந்த 2,000 மூத்த தம்பதியா் சிறப்பிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டது.

இதை நிறைவேற்றிடும் வகையில், துணை முதல்வா் உதயநிதி கடந்த ஆண்டு நவ. 10-ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் 200 மூத்த தம்பதியரை சிறப்பித்தாா். அதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் திருக்கோயில்கள் சாா்பில் 2,000 மூத்த தம்பதியா் சிறப்பிக்கப்பட்டனா்.

Advertisement

இரண்டாம் கட்டமாக திருக்கோயில்கள் சாா்பில் 20,000 மூத்த தம்பதியரை சிறப்பிக்கும் வகையில் சென்னை, வேப்பேரி, பி.கே.என் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 70 வயது நிறைவடைந்த 500 மூத்த தம்பதியருக்கு வேட்டி-சட்டை, புடவை- ரவிக்கை, பழவகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்குமச்சிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி, இதனை தொடங்கி வைத்தாா். இதேபோன்று தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாக்களில் 3,000 மூத்த தம்பதியா் சிறப்பிக்கப்பட்டனா்.

இவ்விழாவில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் அப்பன் உலகாரிய இராமானுஜ எம்பாா் சுவாமிகள், மேயா்ஆா். பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினா் சுகி சிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments