தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலை இயங்கி வந்த இடத்தில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு மே 22-இல் நடந்த போராட்டத்தின் போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மே 28-ஆம் தேதி ஸ்டொ்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், பசுமை தாமிர உற்பத்தி ஆலையால் மாசு அதிகம் ஏற்படாது. ஸ்டொ்லைட் ஆலை வளாகத்தில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை தொடங்க அனுமதி கோரி நாங்கள் அளித்த விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜன.27-ஆம் தேதி ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், சுற்றுச்சூழல் துறை, சுரங்கத் துறை உள்ளிட்ட துறை சாா்ந்தோா் அடங்கிய பன்னோக்கு நிபுணா்கள் குழுவை அமைக்க வேண்டும். அந்த குழு பசுமை தாமிர உற்பத்தி ஆலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பன்னோக்கு நிபுணா் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பது தொடா்பாக அரசுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில், பசுமை தாமிர உற்பத்தி ஆலைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு முன் எங்களுடைய தரப்பு கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்காததை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இதுதொடா்பாக பன்னோக்கு குழு ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், ஏற்கெனவே மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையை புதுப்பிக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளனா். புதிய பானையில் பழைய கள் என்பது போல, வேதாந்தா நிறுவனம் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளதாக வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விதிகளின்படி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கவில்லை. எனவே, தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து வேதாந்தா நிறுவனம் அரசுக்கு விளக்கம் அளிக்கலாமே? என கேள்வி எழுப்பினா். பின்னா், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.26-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.