சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம்! 51 நிபந்தனைகள்
சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு 51 நிபந்தனைகள் விதிப்பு
சேலம் : தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு தயாராகி வரும் அரங்கை மாநகர காவல்துறை ஆணையர் இன்று நேரடியாக ஆய்வு செய்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நாளை மறுதினம் சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்காக கூட்ட அரங்குகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஐந்தாயிரம் பேர் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் நடத்த, காவல்துறையினர் 51 நிபந்தனைகளை விதித்து அதனை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
Advertisement
இந்த நிலையில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணிய பாலச்சந்தரா அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெறவிருக்கும் பகுதிக்கு நேரில் வந்து அரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தலைவர் விஜய் பேசும் இடம், நிர்வாகிகள் அமருமிடம், அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் குறித்தும் அவசரகால வழிகள் ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் மருத்துவ வசதி குறித்தும் விரிவாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இருபதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது எந்தவித அசம்பாவிதம் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனையும் மீறி ஏதாவது பாதிப்பு ஏற்படுமாயின் அவர்களை உடனடியாக மீட்டு அவர்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான கருவிகள் ஆம்புலன்ஸ்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்கள், குழந்தைகள், வயதானவர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்றும் விஜய் பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும், வீட்டில் இருந்தே தொலைக்காட்சி மூலம் காணலாம் என்றும் கூட்ட ஏற்பாட்டாளர் மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.