விஜய் கூட்டத்தில் பங்கேற்ற வடமாநில இளைஞர் பலி!
விஜய் கூட்டத்தில் பங்கேற்ற வடமாநில இளைஞர் பலியானது தொடர்பாக...
விஜய்யின் தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற வடமாநில இளைஞர் மாரடைப்பால் பலியானார்.
தவெக நிர்வாகிகள் சந்திப்பு, தேர்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி கார்டன் உள் வளாகத்தில் இன்று(பிப். 13) நடைபெற்றது. சேலம் மாவட்ட நிர்வாகிகள் பேசியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருந்த வடமாநில இளைஞர் சிராஜ் மாரடைப்பால் பலியானார்.
Advertisement
Advertisement
சேலம் சீல்நாயக்கன்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த சிராஜ் (வயது 37) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பே மனைவி ஒரு மகன் ஒரு மகளுடன் சேலத்தில் வசித்து வருகிறார் .
வெள்ளி கொலுசு தயாரிக்கும் வேலை, கட்டட வேலையிலும் சிராஜ் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நிலை பாதித்த சிராஜுக்கு இதய அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நீண்ட நேரம் திடலில் முன்புறம் சிராஜ் நின்று கொண்டிருந்ததால் மயக்கமடைந்து கீழே விழுந்து இருக்கிறார். உடனே இவரை ஆம்புலன்ஸ் மூலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, சிராஜ் சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது உடலை அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.