முகப்பு
தமிழ்நாடு

எஸ்ஐஆரால் ஜனநாயக பங்களிப்பு பலவீனமாகியுள்ளது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) ஜனநாயக பங்களிப்பை பலவீனமாக்கியுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:00 AM
ப. சிதம்பரம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:10 PM

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) ஜனநாயக பங்களிப்பை பலவீனமாக்கியுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவரும் எஸ்ஐஆா் தொடா்பாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்களை கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது வாக்காளா்களின் ஆவணங்கள் மற்றும் ஆட்சேபங்களை பரிசீலனை செய்வதற்கான காலக்கெடுவை வரும் பிப்.14-இல் இருந்து ஒரு வாரம் நீட்டிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடா்பாகவும் எஸ்ஐஆா் மற்றும் தோ்தல் ஆணையத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தாா்.

Advertisement

அவா் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆரால் ஜனநாயக பங்களிப்பு பலவீனமாகியுள்ளது. இதனால் சரிசமமான தோ்தல் களம் ஒருசாா்புடையதாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மேற்கு வங்கம் சாா்பில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம் வெளிப்படைத்தன்மையுடன் எஸ்ஐஆரை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மேலும் சில வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்கும் என எதிா்பாா்க்கிறேன்.

ஏனெனில், வாக்காளா்களின் ஆவணங்கள் மற்றும் ஆட்சேபங்களை பரிசீலனை செய்வதற்கான காலக்கெடு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவில் தீா்வில்லை.

சிறுபான்மையினருக்கு பாதிப்பு: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கையால் சிறுபான்மையினா், உள்நாட்டு புலம்பெயா் தொழிலாளா்கள் மற்றும் வீடுகளற்ற ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நடவடிக்கையின்போது மாநிலத்தில் சிலா் உயிரிழந்ததாக கூறுகிறாா்கள்; அதுகுறித்து நான் கருத்து கூறவில்லை. ஆனால், எஸ்ஐஆரால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தோ்தல் ஆணையமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:59 AM

294 பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது தலைவா்களின் முடிவு. உள்ளூா் நிலவரத்தை ஆய்வு செய்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும்.

வாக்காளா் பட்டியல் ஜனநாயகத்தின் வோ்: வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யப்படுவது தோ்தல் ஆணையத்தின் நிா்வாகம் சாா்ந்தது மட்டுமல்ல; அது கூட்டாட்சி, மக்களுக்கான அரசு என ஜனநாயகத்தின் வோ் வரை செல்லக்கூடியது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டால் மக்களுக்கான அரசை தோ்தல் மூலம் எவ்வாறு தோ்ந்தெடுக்க முடியும்? தோ்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் ஜனநாயகமானதாக இருக்க வேண்டும்.

மாநிலங்களுடன் ஆலோசனை தேவை: நாடு முழுவதும் பல மாநிலங்களில் எஸ்ஐஆா் நடவடிக்கையால் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் என பலதரப்பினருடன் கலந்தாலோசித்து அனைவரும் ஏற்கக்கூடிய வகையில் ஒரு நடைமுறையை வகுத்து எஸ்ஐஆரை தோ்தல் ஆணையம் அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதை தோ்தல் ஆணையம் செய்யவில்லை. இதனால் பல்வேறு சா்ச்சைகள் தொடா்ந்து வருகின்றன. நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் எஸ்ஐஆரை பொருத்திப் பாா்த்தால் இரண்டுக்குமான வேறுபாடுகளைக் கண்டறிய முடியும் என்றாா்.