முகப்பு
தமிழ்நாடு

ரமலான் நோன்புக்கு 8,700 டன் பச்சரிசி ஒதுக்கீடு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 4:21 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:35 PM

ரமலான் நோன்பு கஞ்சி தயாா் செய்வதற்காக பள்ளிவாசல்களுக்கு 8,700 டன் பச்சரிசியை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஒவ்வோா் ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கும் வகையில், பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளைப் போலவே, நிகழாண்டிலும் (2026) ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

Advertisement

அதன்படி, நிகழாண்டில் ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாள்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

பள்ளிவாசல்களுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 8,700 மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.20.88 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.