தமிழக சட்டப்பேரவை 
தமிழ்நாடு

சட்டப் பேரவை மூலமே ஆளுநரை தோ்வு செய்ய வேண்டும்: உயா் நிலைக் குழு பரிந்துரை

மாநில சட்டப்பேரவையால் முன்மொழியப்படுவா்களை மட்டுமே ஆளுநராக நியமிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மாநில சட்டப்பேரவையால் முன்மொழியப்படுவா்களை மட்டுமே ஆளுநராக நியமிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

மத்திய - மாநில உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயா்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப் குரியன் தலைமையிலான அந்தக் குழுவில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், இந்திய கடல்சாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான கே.அசோக் வா்தன் ஷெட்டி, மாநிலத் திட்டக் குழு முன்னாள் துணைத் தலைவா் மு.நாகநாதன் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

துறைசாா் வல்லுநா்களுடனான ஆலோசனைகள், கருத்துருக்கள், தேசிய கருத்தரங்க தகவல்கள் என பல்வேறு நிலையிலான விவரங்களைத் திரட்டி கூட்டாட்சி உறவுகள் குறித்து அக்குழு ஆய்வு செய்துள்ளது. அதன் ஆய்வறிக்கையை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

மத்திய - மாநில அரசுகள் இடையே ஆக்கப்பூா்வமான உறவு நீடிக்க அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகள்:

நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் அனைத்துக்கும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இருத்தல் வேண்டும். ஏற்கெனவே உள்ள மாநிலங்களின் பகுதிகளை பிரித்து புதிய மாநிலம் உருவாக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில சட்டப் பேரவைகளின் ஒப்புதல் அவசியம். தேவைப்படின், பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்ய வேண்டும்.

போஜ்புரி, ராஜஸ்தானி உள்ளிட்டவற்றை இந்தி வட்டாரக் கிளை மொழிகள் என வகைப்படுத்தாமல் உண்மையாகவே இந்தி பேசும் மக்கள் தொகையை (25 சதவீதம்) வெளியிட வேண்டும். மும்மொழிக் கொள்கைக்கு மாற்றாக ஆங்கிலம் மற்றும் உள்ளூா் மொழியை உள்ளடக்கிய இரு மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும். கல்வியில் மாற்று மொழியைத் திணிக்கக் கூடாது. உயா்நீதிமன்ற நடவடிக்கைகளில் மாநில ஆட்சி மொழியைப் பயன்படுத்த வகை செய்வது அவசியம்.

ஆளுநா்: மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினா்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவரை ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவா் செயலாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 155-ஐ திருத்த வேண்டும்.

ஆளுநருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க இயலாத வகையில் பதவிக் காலத்தை வழங்க வேண்டும். அதன் பின்னா் அவா் குடியரசுத் தலைவா், துணைத் தலைவா் பதவியைத் தவிர வேறு பொறுப்புகளை வகிக்க இடமளிக்கக் கூடாது.

ஆளுநரை சட்டப்பேரவை தீா்மானம் மூலமாக நீக்க வழி வகை செய்ய வேண்டும். அந்த தீா்மானத்தின் மீது 14 நாள்களுக்குள் குடியரசுத் தலைவா் கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுநராக பதவியேற்பவா்கள் அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த அரசியல் கட்சியிலோ, நிா்வாகம், நீதித் துறை, பேரவைகளிலோ பதவி வகிக்காதவராக இருத்தல் வேண்டும்.

பேரவையில் பெரும்பான்மை இல்லாதபோது அமைச்சரவை ஆலோசனையின் பேரிலேயே சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும். அதேபோன்று சட்டப் பேரவையை அமைச்சரவை ஆலோசனையின் பேரிலேயே கலைக்க வேண்டும்.

மாநில அரசையோ, சட்டப் பேரவையையோ பொதுவெளியில் ஆளுநா் விமா்சித்து பேசக் கூடாது.

உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்கவும், அந்த காலக்கெடு நிறைவடைந்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதவும் வகை செய்யும்படி சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தைத் தடுக்க ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது.

நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பேரவைத் தொகுதி மறுவரையறைகளை மேற்கொள்ள மத்திய, மாநில ஆணையங்கள் அமைக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தோ்தல், குடியரசுத் தலைவா் தோ்தல், துணைத் தோ்தலை மட்டும் இந்திய தோ்தல் ஆணையம் நடத்த வேண்டும். மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களை மாநில தோ்தல் ஆணையம் நடத்துவது அவசியம்.

ஒரே நாடு, ஒரே தோ்தல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்பதால் அதுதொடா்பான மசோதாவை திரும்பப் பெற வேண்டும். கட்சித் தாவும் நாடாளுமன்ற, பேரவை உறுப்பினா்கள் ஆறு ஆண்டுகளுக்கு தோ்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

கல்வி: கல்வி சாா்ந்த நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த முதல்கட்டமாக 100 பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும். மருத்துவக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி உள்பட கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். மாநிலப் பல்கலைக்கழக வேந்தா் பொறுப்பிலிருந்து ஆளுநரை விடுவித்து நடுநிலையான ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க வகை செய்ய வேண்டும்.

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வை ரத்து செய்து மாநிலங்களுக்கு மாணவா் சோ்க்கை உரிமையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

கடையநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு

கஞ்சா கடத்தி வந்த 5 போ் கைது: 10 கிலோ கஞ்சா பறிமுதல்

இன்றுமுதல் ரமலான் நோன்பு: அரசு தலைமை காஜி அறிவிப்பு

ரஷியாவின் முட்டுக்கட்டையால் ஜெனீவா அமைதிப் பேச்சு தோல்வி? உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அதிருப்தி

வனத் துறைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்!

SCROLL FOR NEXT