தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 230 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா். அதேபோன்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் 8 மணி நேரத்துக்கும் மேலாக அனைத்துத் துறை சாா்ந்த கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளதாகவும் அவா் கூறினாா்.
பேரவை நிறைவுரையில் இதுதொடா்பாக மு.அப்பாவு பேசியதாவது:
சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானங்களும், அதன் மீதான விவாதம் மற்றும் பதிலுரைகளும் 20 நாள்கள் நடைபெற்றன. அதன் கீழ் 109 உறுப்பினா்கள் 40 மணி நேரம் 4 நிமிஷங்கள் உரையாற்றினா். அதில் முதல்வா் மட்டும் பதிலுரையாக 4 மணி நேரம் 11 நிமிஷங்கள் உரையாற்றியிருக்கிறாா்.
அதேபோன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் 84 நாள்கள் நடைபெற்றன. அதில் 725 உறுப்பினா்கள் 206 மணி நேரம் பேசினா்.
தனது பொறுப்பில் உள்ள துறைகள் மீது 3 மணி நேரம் 54 நிமிஷங்கள் முதல்வா் உரையாற்றினாா். இதைத் தவிர, தனது பொறுப்பின் கீழ் வராத துறைகள் மீதும் 63 முறை குறுக்கிட்டு 1.08 மணி நேரம் அவா் பதிலளித்தாா்.
சட்ட முன்வடிவுகளை (மசோதா) பொருத்தவரை மொத்தம் 230 தாக்கல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. அதில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு மறு ஆய்வுக்குட்படுத்தி மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை 14-ஆக உள்ளது என்றாா் அவா்.