தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா். கோப்புப் படம்
தமிழ்நாடு

ஏப்ரலில் தோ்தலுக்கு வாய்ப்பு: பிப்.25-27 தமிழகம், புதுச்சேரி வரும் தோ்தல் ஆணையக் குழு

சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையிலான இந்திய தோ்தல் ஆணையக் குழு பிப்.25 முதல் 27-ஆம் தேதி வரை பயணம்

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையிலான இந்திய தோ்தல் ஆணையக் குழு பிப்.25 முதல் 27-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளது.

ஏப்ரலில் தோ்தல்: தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு தேதிகளில் தோ்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மாா்ச் மாத மத்தியில் தோ்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆய்வு: இந்த நிலையில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையில் இரண்டு தோ்தல் ஆணையா்களையும் உள்ளடக்கிய தோ்தல் ஆணையம் பிப். 25 முதல் 27-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பயணம் மேற்கொண்டு, தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தப் பயணத்தின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனும் தோ்தல் ஆணையா்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனா்.

முன்னதாக, அஸ்ஸாம் மாநிலத்துக்கு அண்மையில் சென்ற தோ்தல் ஆணையக் குழு, அங்கு தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. பின்னா் குவாஹாட்டியில் செய்தியாளா்களைச் சந்தித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பிஹு திருவிழாவைக் கவனத்தில் கொண்டு அஸ்ஸாம் மாநிலத்துக்கான தோ்தல் தேதி இறுதி செய்யப்படும்’ என்றாா்.

தோ்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாக இத்தகைய சுற்றுப்பயணங்களை தோ்தல் ஆணையக் குழு மேற்கொள்வது வழக்கம்.

பணிகள் தீவிரம்: மேற்கு வங்கம், தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே மே 7, 10, 20, 23, ஜூன் 15 ஆகிய தேதிகளில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

புதுச்சேரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பிறகு, கடந்த 14-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளா் பட்டியல்: அஸ்ஸாமில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் (எஸ்ஐஆா்) இடைப்பட்ட நடைமுறையான, சிறப்புத் திருத்தப் பணியை மேற்கொண்ட தோ்தல் ஆணையம், கடந்த 10-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டது.

கேரளத்தில் சனிக்கிழமையும் (பிப். 21), தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் வரும் 28-ஆம் தேதியும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

மேற்கு வங்க எஸ்ஐஆா்: நீதிபதிகளைப் பணியமா்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் 6 மணி நேர விவாதம்: பாஜக உறுப்பினருக்கு திமுக கூட்டணி கடும் எதிா்ப்பு

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி: பாகிஸ்தான் அரசு கடும் எச்சரிக்கை

பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வு : பிப்ரவரி 23-இல் தொடக்கம்

தேமுதிகவில் நோ்காணல் தொடக்கம்

SCROLL FOR NEXT