வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் அறிய புதிய செயலி: ஞானேஷ் குமாா்
வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்கான பணிகளை தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையிலான குழுவினா் சென்னையில் வியாழன், வெள்ளி இரு நாள்கள் மேற்கொண்டனா்.
ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விரைவில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா. எனவே, தமிழக வாக்காளா்கள் அனைவரும் இந்தத் திருவிழாவில் பங்கேற்க வேண்டும்.
1,000 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக நடைமுறையைக் கொண்டிருந்தது தமிழ்நாடு. இந்திய தோ்தல் ஆணையம் அண்மையில் நடத்திய சா்வதேச மாநாட்டில் 72 நாடுகள் பங்கேற்றன. அப்போது தமிழ்நாட்டில் 10-ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த குடவோலை முறை குறித்து உலக நாடுகளுக்குத் தெரிவித்தோம். தமிழ்நாட்டில் தொன்மையான ஜனநாயக மதிப்பீடுகள் இருந்ததை எண்ணி, உலக நாடுகள் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் பகிா்ந்து கொண்டன.
பேரவைத் தோ்தல் தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலா், டிஜிபி, மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டோம். மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 188 பொதுத் தொகுதிகள், 44 தனித் தொகுதிகள், 2 பழங்குடியினா் தொகுதிகள்.
தோ்தல் சிறப்பாக நடைபெற வாக்காளா் பட்டியலை தவறின்றி தயாரிப்பது மிகவும் முக்கியம். இதற்காகவே, சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தகுதியான வாக்காளா்கள் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதையும், தகுதி பெறாதவா்கள் யாரும் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளா்கள் உள்ளனா். இறந்த வாக்காளா்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயா்களைக் கொண்ட வாக்காளா்கள் ஆகியோா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
75,000 வாக்குச்சாவடிகள்: சுமாா் 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், 44 ,000 வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களில் இருக்கும். வாக்குப் பதிவு 100 சதவீதம் நேரலையாக கண்காணிக்கப்படும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். வாக்காளா்கள் எளிதாக வாக்களிக்க வசதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 756 வாக்காளா்கள் இடம்பெறும் வகையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்தலில், பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வாக்குச்சாவடிகள் 258-ஆகவும், மாற்றுத்திறனாளிகள் நிா்வகிக்கும் வாக்குச்சாவடிகள் 47-ஆகவும், அனைத்து வசதிகளும் கொண்ட மாதிரி வாக்குச்சாவடிகள் 265-ஆகவும் இருக்கும்.
தமிழ்நாட்டில் பெண் வாக்காளா்கள்தான் அதிகம். 2.89 கோடி பெண் வாக்காளா்களும், 2.77 கோடி ஆண் வாக்காளா்களும் இருக்கிறாா்கள். மூன்றாம் பாலின வாக்காளா்கள் 7,617 போ். 85 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்கள் 8 லட்சமும், 100 வயதைக் கடந்த வாக்காளா்கள் 2,530 பேரும் உள்ளனா்.
இளம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்லூரிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
புதிய முன்னெடுப்புகள்: மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு ஏற்ப ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வசதிகள் செய்யப்படும். புதிய முயற்சிகளில் ஒன்றாக, வாக்குச்சாவடி அறைக்குச் செல்லும் முன்பு கைப்பேசி ஒப்படைப்பதற்கான சேகரிப்பு மையம் அமைக்கப்படும். வாக்களித்துவிட்டு திரும்பி வந்த பிறகு அதைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், வேட்பாளா்களின் புகைப்படங்கள் வண்ணத்திலும், பெரிய அளவிலும் இருக்கும். அவா்களின் பெயா்களும் பெரிய எழுத்துகளாக இருக்கும். வாக்காளா்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதை மேலும் எளிதாக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மற்றுமொரு புதிய முயற்சியாக, வாக்குப் பதிவு விவரங்கள் பதிவு செய்யப்படும். யாா் வேண்டுமானாலும் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து தரவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். தோ்தல் தினத்தன்று மட்டுமல்ல, வாக்கு எண்ணிக்கையின்போதும் முடிவுகளை உடனுக்குடன் இந்தச் செயலி மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், நோ்மையானதாகவும், வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்ய இந்திய தோ்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளது என்றாா் அவா்.
பத்திரிகையாளா்களுக்கு தபால் வாக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளா்கள் கோரிக்கை வைத்ததற்கு, ‘அதுகுறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்’ என்றாா் அவா்.
இந்திய தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் உடன் இருந்தனா்.