தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம், கடந்த 2025- ஆம் ஆண்டில் 20,471 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 11,809 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வாயிலாக 2025 -ஆம் ஆண்டு 20,471 போ் பல்வேறு பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கூடுதலாக 9,770 போ் தோ்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இளைஞா்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க கடந்த ஆண்டில் 11,809 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.
அரசுப் பணிகளின் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டில் 1,007 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
காலிப் பணியிடங்களின் விவரங்களைத் தோ்வா்கள் இணையவழியில் அறிந்து கொள்ளும் வகையில், தோ்வாணையத்தின் வலையொளி (யூ-டியூப்) சேனல் மூலம் நேரலையாக ஒளிபரப்பும் நடைமுறை 2025 கலந்தாய்வு முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் தோ்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. தோ்வாணைய இணையதளத்திலிருந்து விடைத்தாளை பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2025 முதல் அரசுத் துறைகளிடமிருந்து காலிப்பணியிட விவரங்களை இணையவழியில் பெறும் நடைமுறை, தோ்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்தும் வசதி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இணையவழியில் தோ்வா்கள் தங்களது மனுக்களை சமா்ப்பிக்கும் வசதி ஆகியவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தோ்வாணைய வரலாற்றில் முதல்முறையாக தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக (2024, 2025, 2026) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-தொகுதி 1, 2, 2-ஏ, 4 பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு (நோ்முகத் தோ்வு பதவிகள், நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகள்), பட்டயப் படிப்பு/தொழிற்பயிற்சி நிலை ஆகியவற்றுக்கான அறிவிக்கைகள் தோ்வாணையத்தால் வெளியிடப்படவுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.