திருச்சி: அன்பு செய்ய அறிவுறுத்தும் ஆன்மிகத்தை வைத்தே, சில கும்பல்கள், வம்பு செய்வதற்காக பயன்படுத்துகின்றன என்று திருச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறாா். இன்று தொடங்கும் நடைப்பயணம் வரும் 12-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்களே, வெறுப்பு பேச்சு பேசி, மோதலை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். அன்பு செய்ய அறிவுறுத்தும் ஆன்மிகத்தை வைத்து சில கும்பல்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகின்றன.
இந்த நிலையில்தான் வைகோ, சமத்துவ நடைபயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவரது நடைப்பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்.
நாட்டின் எல்லைக்குள் மற்றும், மாநிலம் விட்டு மாநிலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். தமிழக காவல்துறை நடத்திய சோதனையில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டையில் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் சிக்கின.
நாட்டுக்குள் பல்வேறு வழியாக போதைப் பொருள் வருகிறது, அதனை மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி, பாதையை அடைக்க வேண்டும்.
போதைப் பொருளை புழக்கத்தில்விடும் குற்றவாளிகளில், நைஜீரியா போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க வேண்டும் என பெற்றோரை நான் கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகள் பாதை மாறிப் போவதை வேடிக்கை பார்க்க முடியாது.
யூடியூப் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கும் மாணவர்கள், தவறான பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது. அதுபோல, தாங்கள் எடுக்கும் படங்களில் திரைத்துறையினரும் போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையில் காட்சி வைக்கக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.