ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு திரும்பி வந்தது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு நீலகிரி மாவட்டம், ஊட்டி குன்னூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மலை ரயில் பாதையில் மண் சரிந்தும், மரங்கள் சாய்ந்தும் கிடந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம் போல் காலை புறப்பட்டு செல்லும் மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதி வழியில் நிறுத்தப்பட்ட மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு திரும்பி வந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சுற்றுலா பயணிகளுக்கு பயண கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம் போல் தினசரி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மலை ரயில் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்டு செல்லும் பண்டிகை கால சிறப்பு மலை ரயில் சேவையை ரத்து செய்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.