தமிழகத்தில் ஜன.5 முதல் 9-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு கேரள கடலோரப் பகுதிகளையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக ஜன.5 முதல் ஜன.9-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) முதல் ஜன.7-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சோ் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சனிக்கிழமை காலை 8 மணிவரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
நாலுமுக்கு (திருநெல்வேலி) 50, ஊத்து, காக்காச்சி, மாஞ்சோலை (திருநெல்வேலி)-40, அழகரை எஸ்டேட், கோடநாடு, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி)-30. ஆதாா் எஸ்டேட் (நீலகிரி) 20.