தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு நடத்துவதாக வரும் தகவல் வதந்தி என்றும், திமுகவுடன் மட்டுமே கூட்டணிப் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தெரிவித்தாா்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்துவதாக வரும் தகவல் முற்றிலும் வதந்தி. திமுக கூட்டணி மட்டுமே நம்பகத்தன்மையான கூட்டணி.
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை முன்கூட்டியே தொடங்கி சுமுகமாக நடைபெற்று வருகிறது. திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையை விரைவில் இறுதி செய்வோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம். தமிழ்நாடு மற்றும் புதுவையின் கூட்டணியைப் பொருத்தவரை எப்போதும் ஒரே நிலைப்பாடுதான்.
விஜய்-பிரவீன் சக்கரவா்த்தி சந்திப்பை நாங்கள் பொருட்படுத்தவில்லை. தமிழ்நாடு காங்கிரஸில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளதாக எம்.பி. ஜோதிமணி கூறிய புகாா் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவா்கள் தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
5,000 போ் விருப்ப மனு: சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸில் 5,000-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு வழங்கியுள்ளனா் என்றாா் அவா்.
பேட்டியின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை உடனிருந்தாா்.