சென்னை - ராமேசுவரம் இடையே திருவாரூா் வழியாக பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ராமேசுவரம் - தாம்பரம் (06106) இடையே ஜன. 13 மற்றும் ஜன. 20 ஆகிய தேதிகளிலும், தாம்பரம் -ராமேசுவரம் (06105)இடையே ஜன. 14 மற்றும் ஜன. 21 ஆகிய தேதிகளிலும் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானமதுரை, சிவகங்கை, தேவக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமப்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், பேரளம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாப்புலியூா், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) காலை தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.